கோவில் 449 - விழுப்புரம் மாவட்டம் டி.இடையாறு மருந்தீசர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-449
விநாயகர் சதுர்த்தி திருநாளில் பாலகணபதி கையில் லட்டும் பலாச்சுளையுடனும், சண்முகர் கலியுக ராமப்பிள்ளையாராக அருளுகின்ற விழுப்புரம் மாவட்டம் டி.இடையாறு மருந்தீசர் கோவில்
31.8.2022 புதன்
அருள்மிகு மருந்தீசர் (கிருபாபுரீஸ்வரர்) திருக்கோவில்
டி.இடையாறு-607209
திருக்கோவிலூர் தாலூகா
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: திருக்கோவிலூர் 25 கிமீ,விழுப்புரம் 30 கிமீ,திருவெண்ணெய்நல்லூர் 6 கிமீ
மூலவர்: மருந்தீசர், கிருபாபுரீஸ்வரர், இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர்
இறைவி: சிற்றிடைநாயகி, ஞானாம்பிகை
நாயகர்கள்: 1. கலியுக ராமப்பிள்ளையார் (சண்முக சுப்பிரமணியர்)
2. பாலகணபதி (பலாப்பழ விநாயகர்)
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: மருதமரம்
தீர்த்தம்: சிற்றிடை தீர்த்தம்
புராணப்பெயர்: திருஇடையாறு, திருவிடையாறு
பாடல்: சுந்தரர், திருநாவுக்கரசர், வள்ளலார்
தலமகிமை:
திருக்கோவிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் சாலையில் சித்தலிங்க மடத்தையடுத்து டி.இடையாறு மருந்தீசர் கோவில் அமைந்துள்ளது. சிவக்குடும்பமே அருள்புரியும் சிறப்பு தலம் இது. சுவாமி பெயர்கள், அமைவிடம் என அனைத்துமே வேறு எங்குமே இல்லாத சிறப்பம்சமாகும். .இவர்களை சுகமுனிவர், பிரம்மன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்மந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகம் என்ற சொல்லுக்கு கிளி என்று பெயர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்துகொண்டே இருக்கும்.
இத்திருக்கோவிலில் முருகப்பெருமான் ‘கலியுக ராமப் பிள்ளையார்’ என்று சிறப்புப் பெயரில் அழைக்கப்படுகிறார். இது கல்வெட்டிலும் உள்ளது. சிவாலயங்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் சோமாஸ்கந்த அமைப்பில் முருகன்தான் அருள்பாலிப்பார். ஆனால், இத்தலத்தில் சிவன், பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி. குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் லட்டு மற்றும் பலாச்சுளையுடனும், கீழிரு கரத்தில் அபய முத்திரையும், கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார்.
சுந்தரர் இத்தலத்திற்கு வந்துபாடியுள்ளார். 39 தலங்களை வைப்புத்தலமாக வைத்து இத்தகைய தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார். திருநாவுக்கரசரும், ராமலிங்க அடிகளாரும் இத்தலத்தை பாடியுள்ளனர். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து, வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது
மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரியபூஜை நடக்கிறது. 8ம் நூற்றாண்டு கோவிலானாலும் கி.பி 1471-ல் ஒடிசா மன்னனால் அழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்ம அரசரால் மீண்டும் கட்டப்பட்டது என கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.
தை மாதம் நடக்கும் ஆற்றுத் திருவிழா இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகும். திருமணத்தடை நீங்கும் தலம். நெடுநாள் திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலைமாற்றி எடுத்துச்சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
தல வரலாறு:
கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப் பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். ஒட்டுகேட்ட முனிவருக்கே மானிடப்பிறவி என்றால், ஒட்டுகேட்கும் மானிடர்களுக்கு எத்தகைய பிறவி கிடைக்கும் என்றுச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
தல அமைப்பு:
மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் 2 பலிபீடம் மற்றும் நந்தி காணலாம். கொடிமரம் இல்லை. திருக்கோவில் கருவறையில் மருந்தீசர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்கமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இங்குள்ள மூலவர் கிருபாபுரீஸ்வரர், இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருந்தீசர், மருதீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார். அம்பாள் சிற்றிடைநாயகி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியருள்கின்றார். அம்மனுக்கு ஞானாம்பாள் என்ற பெயருமுண்டு.. சிற்றிடை தீர்த்தம் அம்மன் கோவிலில் கிணறாக உள்ளது.
சோமாஸ்கந்த அமைப்பில் விநாயகர், பாலகணபதி என்ற திருப்பெயருடன் கையில் பலாச்சுளை,லட்டு, கரும்பு ஏந்தி சிவபெருமான் சந்நிதிக்கும், உமா தேவி சந்நிதிக்கும் இடையில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வனை சமேத சண்முக சுப்பிரமணியர் தனி சந்நிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் அதிசயத்தின் அடிப்படையில் இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
உள்சுற்றில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரகங்கள், அகத்தீஸ்வர லிங்கம், சண்டிகேஸ்வரர், சப்தமாதர்கள், பாலாம்ருத விநாயகர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர்.
திருவிழா:
தை மாதம் நடக்கும் ஆற்றுத் திருவிழா, சிவன், பார்வதி, விநாயகர், முருகப்பெருமான் விசேஷ தினங்கள், விநாயகர் சதுர்த்தி (இன்று)
பிரார்த்தனை:
திருமணத்தடை அகல, மன அமைதி உண்டாக, குடும்ப ஒற்றுமை ஓங்க
நேர்த்திக்கடன்:
திருக்கல்யாணம் நடத்துதல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5-8
திருமணத்தடை அகற்றும் விழுப்புரம் மாவட்டம் டி.இடையாறு கோவிலில் மருந்தீசர், சிற்றிடை நாயகி, பாலகணபதி, கலியுக ராமப்பிள்ளையார் (சண்முக சுப்பிரமணியர்)
ஒருங்கே தொழுது நற்பலங்கள் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - மன அமைதி தந்தருளும் விழுப்புரம் மாவட்டம் டி.இடையாறு மருந்தீசர் கோவிலில் கலியுக ராமப்பிள்ளையார் (சண்முக சுப்பிரமணியர்) தேவியருடன்
படம் 2 - குடும்ப ஒற்றுமை ஓங்க அருளும் விழுப்புரம் மாவட்டம் டி.இடையாறு மருந்தீசர் கோவிலில் சோமாஸ்கந்த அமைப்பில் பாலகணபதி கைகளில் பலாச்சுளை, லட்டு, கரும்பு
Comments
Post a Comment