கோவில் 416 - அம்பாசமுத்திரம் வேலாயுதம் நகர் மயிலேறி முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-416
கலி போக்கும் அம்பாசமுத்திரம் வேலாயுதம் நகர் மயிலேறி முருகன் கோவில்
29.7.2022 வெள்ளி
அருள்மிகு மயிலேறி முருகன் திருக்கோவில்
வேலாயுதம் நகர்
அம்பாசமுத்திரம்-627401
திருநெல்வேலி மாவட்டம்
இருப்பிடம்: அம்பாசமுத்திரத்திலிருந்து 3.4 கிமீ, திருநெல்வேலி 45 கிமீ
மூலவர்: மயிலேறி முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஆன்மீக பக்தர்களின் உடனடி நினைவிற்கு வருவது வேதபுரி என்னும் மன்னார்கோவில் ஶ்ரீதேவி பூதேவி சமேத ராஜகோபால சுவாமி கோவிலும், சுயம்புலிங்கமாக அமைந்துள்ள இலந்தையடிநாதர் குடிகொண்டிருக்கும் பிரம்மதேசம் திருக்கைலாயநாதர் திருக்கோவிலும் ஆகும், இந்த சிவ, வைணவ தலங்களுக்கு அருகே உள்ள வேலாயுதமலை என்னும் குன்றில் குடிகொண்டிருக்கும் மயிலேறி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு நாலாம்கரம் பொத்தை என்ற பெயரும் உண்டு.
2 ஆண்டுகளுக்கு முன் 22.08.2020 விநாயகர் சதுர்த்தியன்று, முருகப்பெருமானுக்குரிய வேல் நிறுவப்பட்டது. வேலாயுத மலை மேல் அமைந்துள்ள சுனையில் எலுமிச்சை பழத்தைப் போட்டால் இயற்கையாக அமைந்த சுரங்கம் வழியாக ஓரிரு மைல் தூரத்தில் அமைந்துள்ள பிரம்மதேசம் திருக்கைலாயநாதர் கோவில் திருக்குளத்திற்கு வந்து சேரும்.
ராஜராஜ சோழன் பாண்டிய, சேர நாடுகளை வென்று அம்பாசமுத்திரம் அருகே வாலி வழிபட்ட அயன்திருவாலிஸ்வரருக்கு ஆலயம் அமைத்து பிரம்ம தேசம் ஊரையும் நிர்மாணித்த காலத்தில், வேலாயுத மலை மீது ஏறி அதிசய சுனையை கண்டதாக செவிவழி வரலாறு கூறுகிறது. எனவே இந்த அதிசய சுனைக்கு ராஜா கிணறு என்ற பெயரும் உண்டு. அருட்கொடையாளர்களால் விக்ரகங்களும், உற்சவ மூர்த்திகளும் செய்யப்பட்டு, 23.10.2020-ல் கும்பாபிஷேகம் விமரிசையாக மண்டல பூஜைகள் தினமும் காலையும், மாலையும் சிறப்புற நடந்து வருகின்றன.
.
தல வரலாறு:
ஆதிகாலத்தில் சித்தர்களாலும், அதன்பின் அரசகுலத்தவராலும், பின்னர் கிராம மக்களாலும் வழிபடப்பட்டு வந்த வேலாயுத மலை முருகன் ஆலயம் காலப்போக்கில் கைவிடப்பட்ட காரணத்தால் . சமூக விரோதிகளால் ஆக்ரமிக்கப்பட்டது. வேலாயுத மலை குன்றிலிருந்த ஆலயமம் சிதைக்கப்பட்டு, தெய்வ திருவுருவங்களும் திருடு போயின. ஆலயம் இருந்த இடத்தையும் வெடி வைத்து தகர்க்க முயன்ற போது திருமுருகன் திருவிளையாடலால் ஏற்பட்ட வெடிவிபத்தில் பத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். தப்பிப் பிழைத்தோர் உடைபட்ட பாறையில் வேலும், மயிலும், ஓம் என்னும் பிரணவ மந்திரமும் பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து பதறி ஓடி, அதன்பின் இந்தப்பக்கமே வருவதில்லை.
தல அமைப்பு:
திருக்கோவில் கருவறையில் முருகப்பெருமான், மயிலேறி முருகன் என்ற திருப்பெயருடன் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் முதலான தெய்வங்களும் அருளுகின்றனர்.
.
திருவிழா:
வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி
பிரார்த்தனை:
கலி தீர, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம். அலங்காரம், சிறப்பு பூஜைகள்
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் அம்பாசமுத்திரம் வேலாயுதம் நகர் மயிலேறி முருகனை மனமுருக தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - கலி போக்கும் அம்பாசமுத்திரம் வேலாயுதம் நகர் மயிலேறி முருகன்
பட 2 - நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் அம்பாசமுத்திரம் வேலாயுதம் நகர் மயிலேறி முருகன் கோவில்
Comments
Post a Comment