கோவில் 385 - கடலூர் ராஜேந்திரபட்டினம் (எருக்கத்தம்புலியூர்) திருக்குமாரசுவாமி கோவில் முருகன்

 🙏🙏                                                                                                                                                        

தினம் ஒரு முருகன் ஆலயம்-385 [திருப்புகழ் தலம்]

பேச்சில் குறைபாடுள்ளவர்களை குணமாக்கும் கடலூர் ராஜேந்திரபட்டினம் (எருக்கத்தம்புலியூர்) திருக்குமாரசுவாமி கோவில் முருகன்

28.6.2022 செவ்வாய்

அருள்மிகு திருக்குமாரசுவாமி திருக்கோவில்

திருப்புகழ் தலம்

எருக்கத்தம்புலியூர்

ராஜேந்திரபட்டினம்-608703

கடலூர் மாவட்டம் 

இருப்பிடம்: விருத்தாசலம்-ஜெய்ங்கொண்டம் சாலையில் கோவில் 12 கிமீ


மூலவர்: திருக்குமாரசுவாமி, சுவேதாரண்யேஸ்வரர், நீலகண்டேஸ்வரர்

அம்மன்: வீறாமுலையம்மன், அபின்னகுசநாயகி, அபீதகுஜநாயகி, நீலோற்பலாம்பிகை

நாயகர்: குமரன் (முருகப்பெருமான்)

தலவிருட்சம்: வெள்ளெருக்கு மரம்

தீர்த்தம்: கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம்

புராணப்பெயர்: எருக்கத்தம்புலியூர், வெள்ளெருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், யாழ்ப்பாணாயன்பட்டிணம்

பாடல் தலம்: திருஞானசம்பந்தர், அருண்கிரிநாதர், வள்ளலார் 


தலமகிமை:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில், 12 கிமீ-ல் உள்ள ராஜேந்திரபட்டினத்தில் திருக்குமாரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் ஸ்ரீமுஷ்ணம் என்ற திவ்யதேசம் தெற்கே 10 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. திருஞானசம்பந்தர் பாடியருளிய தேவாரப் பாடல் பெற்ற  நடுநாட்டு தலங்களில் இது 4-வது தலமாகும். சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 215-வது ஆகும். அருணகிரிநாதப்பெருமான் இத்தலத்து முருகவேளை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார் ருணகிரியார் "பூத்தார் சூடும்" என திருப்புகழ் பாடலை அற்புதமாக தொடங்குகின்றார்.


சிவபெருமானின் சாபத்தால் ருத்திரசன்மர் என்ற ஊமைக் குழந்தையாக அவதரித்த முருகப்பெருமான், வழிபட்டுப் பேசும்பேறு பெற்ற தலம். புலிக்கால் முனிவர் வழிபட்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, ராஜேந்திரபட்டினம் திருக்குமாரசுவாமி திருக்கோவிலாகும். திருஞானசம்பந்தர் இயற்றிய ‘தேவாரம்’, அருணகிரிநாதர் இயற்றிய ‘திருப்புகழ்’, வடலூர் ராமலிங்கம் சுவாமிகள் இயற்றிய ‘திருவருட்பா’ ஆகியவை பாடல் பெற்ற தலமாக இது விளங்குகின்றது. புனித திருநீலகண்ட யாழ்பாணரின் பிறந்த தலம். இத்தலம் திருஞானசம்பந்தர் காலத்தில் பாடல் பெற்றதால், அவரின் காலமான ஏழாம் நூற்றாண்டில் இது சிறப்புடன் விளங்கியதை அறிய முடிகிறது. 


பெருமைமிக்க, இத்தலத்தின் இறைவன் மீது கொண்ட விருப்பத்தால், தேவர்களும், முனிவர்களும் பறவைகளாக வழிபட்டு வந்தபோது, வேடர்களின் வேட்டையில் தங்களைக் காத்துக்கொள்ள, வெள்ளெருக்கஞ்செடிகளாகி, இறைவனை வணங்கியதாகவும் தலபுராணம் கூறுகிறது. அதனால் இத்தலம் ‘எருக்கத்தம்புலியூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.


இத்தலத்தில் ராஜராஜ சோழன் மகப்பேறு வரம் பெற்றதால் பிறந்த ராஜேந்திர சோழன் பெயரால் ராஜேந்திரப்பட்டினம் என்றழைக்கப்படுகிறது. பல்லவர், சோழர், பாண்டியர் காலத் திருப்பணி செய்யப்பட்டதைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. மகப்பேறு வரம் மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகளுக்கு பரிகாரத் தலமாக இது போற்றப்படுகிறது. அதேபோல், வெண்குட்டம் நோய் பாதித்தவர்களுக்கும் நோய் நீக்கும் தலமாக விளங்குகின்றது.


தல வரலாறு:

ஒருமுறை சிவபெருமான் கைலாச மலையில் பார்வதி தேவிக்கு வேதங்கள் மற்றும் ஆகமங்களின் அர்த்தத்தை போதித்தார். அவர் கவனமாகக் கேட்கத் தவறியதால், சிவபெருமான் அவளைப் பரதவர் மீனவர்) சமூகத்தில் பிறக்கும்படி சபித்தார். இதனால் கோபமடைந்த முருகப்பெருமான் வேதங்களை கடலில் வீசினார். சிவபெருமான் அவரை வணிகர் சமூகத்தில் ஊமைக் குழந்தையாகப் பிறக்கும்படி சபித்தார்.


முருகன் மதுரையில் தளபதி மற்றும் குணசாலினிக்கு ருத்ரசன்மராகப் பிறந்தார். வாய் பேச முடியாததால், பல சிவன் தலங்களுக்குச் சென்று நிவாரணம் பெறவும், பேச்சு வரவும் வேண்டினார். எருக்கத்தம்புலியூரில் பேசும் திறமை பெற்றவர். இத்தலத்தில் முருகன் குமரன் என்றும் அழைக்கப்படுகிறார் சிவனை வழிபட்டதால், இங்குள்ள இறைவனுக்கு திருகுமாரசுவாமி என்று பெயர். கோவிலில் ருத்ரசன்மார் சிலை உள்ளது.


தல அமைப்பு:

மூன்று நிலை ராஜகோபுரம் ஐந்து கலசங்களைத் தாங்கி வரவேற்கிறது. அருகே பிரமாண்ட வடிவில் திருக்குளம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் வலது புறத்தில் விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. கொடிமரத்திற்கு அருகே பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. 


வெளிச்சுற்றில் இடதுபுறம் நவக்கிரக சந்நிதி, நால்வர் சந்நிதி, திருநீலகண்ட யாழ்ப்பாணர், மனைவி சூளாமணி ஆகியோர் சந்நிதிகள் அமைந்துள்ளன. மகாகணபதி, விசுவநாதர், விசாலாட்சி, லட்சுமி முதலான தெய்வங்கள். அடுத்து உபகோவிலில் முருகப்பெருமான், குமரன் என்ற திருநாமத்துடன் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். ஊமையாக இருந்த அழகன் குமரன், சிவப்பெருமானை இத்தலத்தில் வணங்கியதால் பேசும் சக்தி வந்தது. 


அடுத்து கோஷ்ட மூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, அவருக்கு மேற்புறம், சிறிய கோவில் அமைப்பு காணப்படுகிறது. அதில் சட்டைநாதர் காட்சி தருகின்றார். அவரைத் தரிசிக்க படிக்கட்டு வசதியும் உள்ளது. துர்க்கை அதன் அருகே சண்டிகேஸ்வரர் வடிவம் அமைந்துள்ளது. துவாரபாலகர்களைக் கடந்த பின் நடுநாயகமான இறைவன் நீலகண்டேசுவரர் லிங்க வடிவில் கிழக்கு முகமாய் அருள்காட்சி வழங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவர் சுவேதார்க்கவனேசுவரர், குமாரசுவாமி என்றும் வழங்கப்படுகிறார். இவரே இத்தலத்தின் திருவிளையாடல்கள் அனைத்திற்கும் காரணமானவராக விளங்குகிறார். சுவாமியின் சற்று வலதுபுறம் அன்னை நீலமலர்க்கண்ணி சந்நிதி முகமாய் அமைந்துள்ளது. அபயவரத முத்திரையுடன் அன்னை தரிசனம் தருகிறார். அன்னை அபீத குஜாம்பாள், நீலோற்பலாம்பாள் என்றும் வழங்கப்படுகிறார்.


திருவிழா:

மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் 


பிரார்த்தனை:

பேச்சு குறைபாடு குணமாக, குழந்தை பாக்கியம் வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்


திறக்கும் நேரம்:

காலை 6-12 முதல் மாலை 5-8 வரை


பிள்ளை வரம் தந்தருளும் ராஜேந்திரபட்டினம் (எருக்கத்தம்புலியூர்) திருக்குமாரசுவாமி மற்றும் முருகனை தினமும் வணங்குவோம்!  


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - பேச்சில் குறைபாடுள்ளவர்களை குணமாக்கும்  ராஜேந்திரபட்டினம் (எருக்கத்தம்புலியூர்) திருக்குமாரசுவாமி கோவிலில் குமரன்


படம் 2 - பிள்ளை வரம் தந்தருளும் ராஜேந்திரபட்டினம் (எருக்கத்தம்புலியூர்) திருக்குமாரசுவாமி கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்