கோவில் 384 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-384
தெய்வீக உணர்வை ஏற்படுத்தி அருளுகின்ற கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்
27.6.2022 திங்கள்
அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில்
கொடைக்கானல்-624101
திண்டுக்கல் மாவட்டம்
இருப்பிடம்: கொடைக்கானல் நகரிலிருந்து 3 கிமீ
மூலவர்: குறிஞ்சி ஆண்டவர்
தலமகிமை:
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் உள்ள இந்தக் கோவிலில் இருந்து பார்த்தால் வைகை அணையையும் பழநி மலைத்தொடரையும் பார்க்க முடியும். தற்போதும் கோவிலின் இடதுபுறத்தில் இருந்து பார்த்தால் பழநி மலைக்கோவிலை காணலாம். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், குறிஞ்சி ஆண்டவரான முருகனை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மே மாத கோடை விழாவில் மலர் வழிபாடு விமரிசையாக நடைபெறும். இதனைக் காண நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவர் கோவில் நடை முழுவதும் அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் குறிஞ்சி முருகனுக்கும் இந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் குறிஞ்சி செடிகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இச்செடிகள் பூக்கும். கடந்த 2018-ல் குறிஞ்சிப் பூக்கள் நீல நிறத்தில் கொடைக்கானலில் பூத்து குலுங்கின. குறிஞ்சி மலர் பூக்கும் காலங்களில், இக்கோவிலில் உள்ள முருகனுக்கு பெரும்பாலும் குறிஞ்சிப் பூக்களைக் கொண்டே அலங்காரங்கள் செய்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தல வரலாறு:
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அரிய வகை குறிஞ்சி மலர்கள் நீல வண்ணத்தில் பூத்துக் குலுங்கும் அழகை ரசித்த ஆஸ்திரேலிய பெண்மணி ஆர்.எல்.ஹாரிசன் என்பவர், இப்பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவரை திருமணம் செய்தார். தனது பெயரை லீலாவதி என மாற்றிக் கொண்டார். கொடைக்கானலில் தங்கிய அவர், அங்கிருந்தே முருகன், தண்டாயுதபாணியாய் வீற்றிருக்கும் பழநி மலையை தினமும் பார்த்து பரவசமடைந்துள்ளார்.
மழைக்காலங்களில் மேகக் கூட்டங்கள் பழநி மலை மற்றும் கோவிலை மறைத்ததால், கொடைக்கானலில் ஒரு பகுதியிலேயே கடந்த 1936-ல் ஒரு முருகன் கோவிலைக் கட்டி வழிபட்டுள்ளார். பின்னர் ராமநாதனின் வளர்ப்புப் பெண்ணான பத்மினி மற்றும் அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோர் இந்தக் கோவிலை பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளனர். இதன் பின்னர், இக்கோவில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
தல அமைப்பு:
பிரதான கருவறையில் மூலவராக குறிஞ்சி ஆண்டவர் இரு கரங்களுடன் எழுந்தருளி பக்த பெருமக்களுக்கு அருள்பாலிக்கின்றார். குறிஞ்சி ஆண்டவர் பழநியில் உள்ளதைப் போலவே தண்டபாணி வடிவில் முருகப்பெருமான் இருப்பது தனிச்சிறப்பு. இங்கு ஆண்டுதோறும் மலர் வழிபாட்டு விழா நடைபெறுவது வழக்கம். தனி சந்நிதிகளில் விநாயகர், பெருமாள், கருடன் முதலானோர் அருளுகின்றனர்.
திருவிழா:
மே மாத கோடை விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, வைகாசி விசாகம்
பிரார்த்தனை:
மன அமைதி வேண்டி, ஆனந்தம் வேண்டி, கேட்டவை கிடைக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்
திறக்கும் நேரம்:
காலை 6 முதல் மாலை 7 வரை
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் வேண்டி வணங்கினால் மன அமைதியையும், மனமகிழ்ச்சியையும் கொடுத்து அருளுவார்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - தெய்வீக உணர்வை ஏற்படுத்தி அருளுகின்ற கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர்
படம் 2 - மன அமைதியையும், மனமகிழ்ச்சியையும் கொடுத்து அருளும் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் மலர் அலங்காரம்
Comments
Post a Comment