கோவில் 383 - சென்னை பெசன்ட் நகர் ஆறுபடை வீடு முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-383
பிரதோஷ நன்னாள் கார்த்திகை திருநாளில் ஆனந்தம் அருளும் சென்னை பெசன்ட் நகர் ஆறுபடை வீடு முருகன் கோவில்
26.6.2022 ஞாயிறு
அருள்மிகு ஆறுபடை வீடு முருகன் திருக்கோவில்
பெசன்ட் நகர்
சென்னை-600090
இருப்பிடம்: சென்னை பெசன்ட் நகரிலிருந்து 1 கிமீ
மூலவர்: ஆறு படை வீடு முருகன்
தலமகிமை:
சென்னை நகரில் உள்ள பெசன்ட் நகரில் முருகப்பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆறுபடை வீடு முருகன் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இக்கோவில், முருகப்பெருமானின் அனைத்து அறுபடை வீட்டு கருவறைகளைக் கொண்டுள்ளது. இந்த கோவில் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
இந்த கோவிலிலிருந்து சுமார் 1.5 கிமீ தூரத்தில் பாம்பன் சுவாமிகளின் ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ளது. அந்த வட்டாரத்தில் அறுபடை முருகன் கோவிலின் கட்டுமானம் இருக்கப்போகிறது என நீண்ட காலத்திற்கு முன்பே பாம்பன் சுவாமிகள் சரியாக கணித்துரிந்தார்.
தல வரலாறு:
முருகப்பெருமானின் ஆறு கோவில்கள் முருகனின் மிக முக்கியமான கோவில்கள் ‘அறுபடை வீடு கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன. பெசன்ட் நகரில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவில் ஒரு தனித்துவமான கோவிலாகும், இது இந்த அறுபடை வீடுகளையும் ஒரே வளாகத்திற்குள் கொண்டுள்ளது. 1984-ம் ஆண்டில், டாக்டர் அழகப்பா அழகப்பன், அனைத்து அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என்ற யோசனையுடன் அவர் காஞ்சி பெரியவரிடம் சென்று, இது குறித்த தனது எண்ணங்களை தெரிவித்தார். மகா பெரியவா அதற்கு, இந்த தெய்வீக திட்டத்திற்கு தன் ஆசிர்வாதத்தை வழங்கினார். இந்த கோவில் கட்டுவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை அப்போதைய முதல்வர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன். வழங்கியவர். இந்த கோவிலின் பிரதிஷ்டை 2002-ல் நடைபெற்றது.
தல அமைப்பு:
இந்தக் கோவில் கிழக்கு நோக்கியமைந்துள்ளது. கோவிலில் ஏழு பிரதான சந்நிதிகளும் சில துணை ஆலயங்களும் உள்ளன. மகா வல்லப கணபதி சந்நிதி மையத்தில் அமைந்துள்ளது. சுவாமிமலை சந்நிதி வடகிழக்கில், கிழக்கில் திருச்செந்தூர் சந்நிதி, தெற்கில் பழமுதிர்ச்சோலை மற்றும் திருப்பரங்குன்றம், தென்மேற்கில் பழனி மற்றும் வடமேற்கில் திருத்தணி அமைந்துள்ளது.
கோவிலின் மையத்தில் உள்ள சந்நிதியில் மகா வல்லப கணபதியின் பெரிய சிலை உள்ளது. அவர் நியூயார்க் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் செந்திலாண்டவர் சந்நிதியின் பின்புறம் சரியாக அமைந்துள்ளது.
சுவாமிமலை சந்நிதியில் அருளும் முருகன் சுவாமிநாதர் என்று வணங்கப்படுகிறார். இந்த சந்நிதியின் நுழைவாயிலில் விநாயகரின் ஒரு சிறிய சிலை காணப்படுகிறது. பெரிய வேலின் கற்சிலை மற்றும் யானை வாகனம் ஆகியவை காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் விநாயகர், துர்க்கை, பழநியாண்டவர் மற்றும் முருகன் ஆகியோர் கோஷ்டத்தில் உள்ளனர்.
திருச்செந்தூர் சந்நதியில் அருளும் முருகன் செந்திலாண்டவன் என்று வணங்கப்படுகிறார். இந்த சந்நதியை நோக்கி கொடிமரம் மற்றும் மயில் வாகனம் அமைந்துள்ளது. ஷண்முகரின் சிறிய உற்சவ சிலைகளின் துணை ஆலயமும் இந்த சந்நதியில் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் விநாயகர், துர்க்கை, பழநியாண்டவர் மற்றும் முருகன் ஆகியோர் கோஷ்ட சிலைகளாக இன்னும் இரண்டு வடிவங்களில் உள்ளனர். இந்த சந்நதியின் வளாகத்தில் நாம் அமரும்போது கிடைக்கும் கடலின் அழகிய காட்சி இதன் சிறப்பம்சமாகும்.
பழமுதிர்ச்சோலை சந்நதியில் அருளும் முருகன் பழமுதிர்ச்சோலை சுவாமி என்று வணங்கப்படுகிறார். இந்த ஆலயத்தை நோக்கி மயில் வாகனம் காணப்படுகிறது. முருகன் வடக்கு நோக்கி அருள்கிறான். முருகனின் உருவத்துடன் கூடிய ஒரு பெரிய வேல் இந்த சந்நதியில் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் பல தூண்கள் உள்ளன. தூண்கள் மற்றும் சுவர்களில் முருகனின் மினியேச்சர் உருவங்கள் வெவ்வேறு வடிவங்களிலும் தோரணைகளிலும் உள்ளன.
திருப்பரங்குன்றம் சந்நதியில் தெய்வயானை மற்றும் நாரதரிஷி ஆகியோருடன் முருகப்பெருமானும் உள்ளார். முருகன் வடக்கு நோக்கி அருள்கிறான். இந்த ஆலயத்தை நோக்கி மயில் வாகனம் காணப்படுகிறது. சத்தியகிரீஸ்வரரின் (சிவலிங்கம்) துணை சந்நதியும் அவரது மனைவியான அம்பிகையும் அவரது வாகனமான நந்தியும் இந்த கோயிலில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் விநாயகர், துர்க்கா, பழநியாண்டவர் மற்றும் முருகன் ஆகியோர் கோஷ்ட சிலைகளாக இன்னும் பிற இரண்டு வடிவங்களில் உள்ளனர்.
பழநி சந்நதியில் முருகப்பெருமான் பழனி ஆண்டவன் என்று வணங்கப்படுகிறார். இந்த ஆலயத்தை நோக்கி மயில் வாகனம் காணப்படுகிறது. முருகன் மேற்கு நோக்கி அருள்கிறான். இடும்பனின் துணை ஆலயமும் அருகிலேயே அமைந்துள்ளது.
திருத்தணி சந்நிதியில் முருகப்பெருமான் சுவாமிநாத பெருமானாக வடமேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். தெற்கில் பழமுதிர்சோலை சந்நிதியில் முருகப்பெருமான் வேலுடன் அருள்பாலிக்கின்றார். .
திருவிழா:
தைப் பூசம், பங்குனி உத்திரம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி
பிரார்த்தனை:
கல்வி, ஞானம், செல்வம், ஆனந்தம் பெருக, நினைத்த காரியங்கள் கைகூட,
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்
திறக்கும் நேரம்:
காலை 7-11 மாலை 5-8.30
நினைத்த காரியங்கள் கைகூட அருளும் சென்னை பெசன்ட் நகர் ஆறுபடை வீடு முருகனை வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - கல்வி, ஞானம், செல்வம், ஆனந்தம் பெருகிட அருளும் பெசன்ட் நகர் ஆறுபடை வீடு முருகப்பெருமான்
படம் 2 - நினைத்த காரியங்கள் கைகூட அருளும் பெசன்ட் நகர் ஆறுபடை வீடு முருகன்
Comments
Post a Comment