கோவில் 382 - முருகப்பெருமான் நண்டுடன் காட்சியருளும் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில்

 🙏🙏                                                                                                                                                       தினம் ஒரு முருகன் ஆலயம்-382

கார்த்திகை நன்னாளில் முருகப்பெருமான் நண்டுடன் காட்சியருளும் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில்

25.6.2022 சனி

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்

திருந்துதேவன்குடி-612105 

திருவிடை,மருதூர் வட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்

இருப்பிடம்: கும்பகோணம் 12 கிமீ


மூலவர்: கற்கடேஸ்வரர்

அம்மன்: அபூர்வநாயகி, அருமருந்து நாயகி

உற்சவர்: சோமாஸ்கந்தர்

உப மூலவர் – முருகப்பெருமான்

தல விருட்சம்: நங்கை மரம்

தீர்த்தம்: நவபாஷாண தீர்த்தம்

புராணப்பெயர்: கற்கடேஸ்வரம்

பாடியவர்: திருஞானசம்பந்தர் 


தலமகிமை:

மயிலாடுதுறை-திருவாரூர் வழியில் பூந்தோட்டம் என்ற இடத்திலிருந்து மேற்கே சுமார் 6 கிமீ தொலைவில் ஈசனின் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில் சிறப்புற அமைந்துள்ளது. கும்பகோணத்திலிலிருந்தும் இக்கோவிலுக்கு செல்லலாம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 42-வது தலம் ஆகும். 


இது ஒரு சிவஸ்தலமாக இருந்தாலும், முருகப்பெருமானும் ஆற்றல் மிக்கவராய், அபூர்வமான நிலையில் இருந்து அருளுவது சிறப்பு. இக்கோவிலில் அருளும் முருகப்பெருமானின் இடக்கரத்தில் நண்டு காணப்படுவது அதிசயம். அதேபோல் வீதியுலா வரும் சோமாஸ்கந்த மூர்த்தியின் இடது கரத்திலும் நண்டு காணப்படுகிறது.


இந்தக் கோவிலில் முருகன் கையில் நண்டு இருப்பதன் பின்னணியில் ஒரு திருக்கதை சொல்லப்படுகிறது.  இந்தத் தலத்து இறைவன் கற்கடேஸ்வரரை அரசலாற்றிலிருந்து ஒரு நண்டு வந்து பூஜிப்பது அன்றாட வழக்கம். அதன் காரணமாகவே ஊருக்குக் கடகம்பாடி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப் படுகிறது.  ஒரு தருணத்தில் முருகப்பெருமான் இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரை தியானித்து தவமியற்றினார். வழக்கப்படி சிவபூஜைக்கு வந்த நண்டு முருகப்பெருமானின் கையில் ஏறி அவருடைய தவத்தைக் கலைத்தது. தவம் கலைந்த முருகப்பெருமான், அந்த நண்டை எடுத்துத் தன் இடது கரத்தில் ஏந்திக்கொண்டார். அதனால்தான் முருகப்பெருமானின் இடது கரத்தில் நண்டு இருக்கிறது. அதேபோல் வீதியுலா வரும் சோமாஸ்கந்த மூர்த்தி திருவுருவத்திலும் கந்தரின் கையில் நண்டு இருக்கிறது. சிவபூஜை செய்ததன் பயனாக அந்த நண்டு முருகப்பெருமானின் இடது கரத்தில் இருக்கும் பெரும் பேற்றைப் பெற்றுவிட்டது!''


ஒருமுறை குருபகவானின் சாபத்துக்கு ஆளான இந்திரன், இந்தத் தலத்தில் அருளும் சிவப்பெருமானை வழிபட்டு வரம் பெற்றதாக வரலாறு. சிவனை வணங்கிய இந்திரன் தவறை உணர்ந்து திருந்தியதால் இத்தலம், “திருந்துதேவன்குடி’ என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை. “நண்டு கோவில்’ என்றுதான் இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.


இக்கோவிலில் வைஷ்ணவி துர்க்கை, சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் கிழக்கு நோக்கி இருப்பது ஒரு சிறப்பு என்றால், திட்டையில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அருகில் குருபகவான் இருப்பதைப்போல், இங்கே சுவாமிக்கும் அம்பாளுக்கும் அருகில் இரண்டடி உயரத்தில் சனீஸ்வரர் காட்சி தருகிறார். அதனால் சனிக்கிழமைகளில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்குச் சனியினால் ஏற்படக்கூடிய சகல தோஷங்களும் விலகிவிடும் என்பது ஐதிகம்.


இந்தக் கோவிலிலுள்ள வைஷ்ணவி துர்கை மிகவும் வரப்பிரசாதி. இவளை வழிபட்டால், காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவியை வழிபட்ட பலன் கிடைப்பதாக ஐதிகம். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற வெளிமாநில ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வைஷ்ணவி துர்கையை வழிபட்டுச் செல்கின்றனர். 


திருமணம் தடைப்படுபவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கோவிலுக்கு வந்து வைஷ்ணவி துர்கைக்கு நெய்விளக்கேற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமைவதாகவும், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்களின் நம்பிக்கை. சொந்தமாக வீடு என்று விரும்புபவர்கள் கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டு சென்றால், அவர்களுக்கு விரைவில் சொந்த வீடு  அமையும் என்றும் சொல்லப்படுகிறது. 


தல வரலாறு:

ஒரு சமயம் துர்வாச மகரிஷி, சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் முதிய தோற்றத்தைக் கண்டு பரிகாசம் செய்தான். அவரது பூஜை கலையும் விதமாக கை தட்டி அழைத்தான். ஆனாலும் துர்வாசர் திரும்பவில்லை. கந்தர்வனோ விடுவதாக இல்லை. நண்டு போல நடந்து காட்டி அவரை மேலும் கேலி செய்தான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். சிவலிங்க பூஜை செய்து வழிபட்டால், விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நண்டு வடிவில் இத்தலம் வந்த கந்தர்வன், சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருப்பதைக் கண்டான்.

தினமும் அருகிலுள்ள புஷ்கரிணியில் மலர் பறித்து, சுவாமிக்கு படைத்து வழிபட்டு வந்தான். இதனிடையே, அசுரர்களை அழிக்கும் சக்தி வேண்டி இந்திரன், தன் குருவின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்ய வந்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து பூஜித்து வந்தான். நண்டு வடிவில் வந்த கந்தர்வன் சிவனுக்கு மலர் படைக்கவே, தினமும் இந்திரனின் பூஜையில் ஒரு மலர் குறைந்தது. இந்திரனுக்கு காரணம் புரியவில்லை. ஒருசமயம் நண்டு பூஜை செய்வதை பார்த்துவிட்டான். தான் பூஜை செய்யும் லிங்கத்தை பூஜிக்கும் தகுதி பிறருக்கு கிடையாது என ஆணவம் கொண்ட அவன், நண்டை கொல்ல முயன்றான். நண்டு, சிவபூஜைக்காக லிங்கத்தின் பாணம் மீது ஏறியபோது, வாளால் வெட்ட முயன்றான். அப்போது சிவன், லிங்கத்திற்குள் துளை ஏற்படுத்திக் கொடுக்கவே, கந்தர்வன் அதற்குள் புகுந்து விமோசனம் பெற்றான். அப்போது இந்திரனின் வாள், லிங்கத்தின் மீது பட்டு காயம் உண்டானது. தவறை உணர்ந்த இந்திரன் மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு, ஆணவத்துடன் இருப்பவர்களால் ஒரு செயலிலும் வெற்றி பெற முடியாது. பணிவு குணமே நன்மை தரும் என்று அறிவுறுத்தி காட்சி தந்தார். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர், "கற்கடேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

தல அமைப்பு:

சிவன் கோவிலில் பொதுவாகத்  துர்க்கை வடக்குப் பிராகாரத்தில், வடக்கு நோக்கிக் காட்சி தருவாள். ஆனால், சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் கிழக்கு நோக்கி அருளுகின்றார். கருவறை மூலவராக கற்கடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். கிரக தோஷங்கள் நிவர்த்தியாக கற்டேஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இந்த எண்ணெயை உட்கொண்டால் நோய் நீங்குவதாகவும் நம்பிக்கை இருக்கிறது. அன்னை அபூர்வநாயகி மற்றும் அருமருந்து நாயகி நோய்களை தீர்த்தருளுகின்றனர். துர்க்கை கையில் சங்கு சக்கரம் ஏந்தி சாந்தம் தவழும் திருமுகத்துடன் கிழக்கு காட்சி தருகின்றார். வைஷ்ணவி என்றும் திருப்பெயர் கொண்டு அருள் புரிகிறாள். 


இத்தலத்தில் மட்டுமே முருகப்பெருமான் இடதுகரத்தில் நண்டு ஏந்தி காட்சி தந்து வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு. இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சுதை வடிவில் நடராஜர் இருக்கின்றார். நவக்கிரக சந்நிதி கிடையாது.


திருவிழா:

சிவராத்திரி, திருகார்த்திகை, முருகனுக்குரிய விசேஷ தினங்கள், செவ்வாய், வெள்ளி 


பிரார்த்தனை:

ஆயில்யம் நட்சட்திர தோஷம் நீங்க, கிரக தோஷங்கள் நீங்க, நோய்கள் தீர  


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்


திறக்கும் நேரம்:

காலை 9-1.30 மாலை 4-7


திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரரை முருகப்பெருமானுடன் சேர்த்து வணங்கினால் வாழ்வில் தீராத நோய்களையும் தீர்த்தருளுவார்!  


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - தோஷங்களை தீர்த்தருளும் முருகப்பெருமான், திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில்



படம் 2 - தீராத நோய்கள் (புற்று நோய்), தோஷங்கள் நீக்கியருளும் அன்னைய்ருடன் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்