கோவில் 21 - சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-21
செவ்வாய் தோஷம் நீக்கும் சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோவில்
29.6.2021 செவ்வாய்
அருள்மிகு சதுர்முக முருகன் திருக்கோவில்
சின்னாளப்பட்டி-624302
திண்டுக்கல் மாவட்டம்
இருப்பிடம்: திண்டுக்கல்லிருந்து 11 கிமீ
அலைப்பேசி: 9944059802 & 9003754242
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: வேங்கை மரம்
தலமகிமை:
திண்டுக்கல்லில் இருந்து 11 கி.மீ. தொலைவில் சின்னாளப்பட்டியில் சதுர்முக முருகன் (நான்கு முகங்கள் உடைய முருகன்) கோவில் அமைந்துள்ளது. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சி தரும் ஒரே சிறப்பு தலம் இதுவாகும். இப்படி நான்கு முகங்களுடன் முருகக்கடவுளைத் தரிசிப்பது மிகவும் விசேஷம்.
வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவையும் மிக முக்கியமான விழாக்கள் ஆகும்.
வளர்பிறை அஷ்டமி தினத்தன்று இங்குள்ள பைரவருக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு தயிர்சாதம், வடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், சத்ரு உபாதைகள் நீங்கும்; இத்திருத்தலத்தில் செவ்வாய்கிழமைகளில் காலை சரியாக எட்டு மணிக்கு சதுர்முக முருகனுக்கு பசும்பாலில் குங்குமப்பூ மற்றும் குங்குமம் கலந்த “செம்பால் அபிஷேகம்” செய்வது இத்தலத்தின் சிறப்பு. செவ்வாய்க்கிழமைகளில், குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகம் செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கும்; சத்ரு பயம் விலகும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம். மற்றும் இங்கே உள்ள பாலதிரிபுரசுந்தரிக்கு புடவை சார்த்தி, செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபட்டால், கல்வியும் ஞானமும் பெறலாம். அதேபோல், அங்காரகன் வழிபாடும் இங்கு விசேஷம். செவ்வாய்க்கு அதிபதியான கந்தக் கடவுளுக்கு செவ்வாய்க் கிழமைகளில், துவரம்பருப்புடன் அச்சு வெல்லமும் கலந்து படைத்து வேண்டிக்கொண்டால், வீடு- மனை சம்பந்தமான பிரச்னைகள் யாவும் நீங்கும் என்கின்றனர்
தல வரலாறு:
நான்முகக் கடவுளான பிரம்மாவிடம் பிரணவத்தின் பொருளைக் கேட்டு, விளக்கம் தெரியாமல் தவித்த பிரம்மாவை சிறையில் அடைத்தார் சிவமைந்தன். அதை நினைவுகூறும் வகையில் இத்தலத்தில் நான்முகனாக, சதுர்முகத்துடன் முருகப்பெருமான் தோற்றமளித்து அருள்பாலிக்கின்றார் என்கிறது தல வரலாறு.
பிரம்மரிஷி பட்டம் பெறும் நோக்கமாகக் கொண்டு கடும்தவம் செய்து கொண்டிருந்தார் விஸ்வாமித்திர முனிவர். அப்போது விஸ்வாமித்ரர் முன்பாக சிறுமி வடிவில் தோன்றிய பாலதிரிபுரசுந்தரி அம்பிகை குங்குமப்பொட்டு வைக்கும்படி கேட்க, அந்த சிறுமியின் நெற்றியில் விஸ்வாமித்திரர் குங்குமப் பொட்டு வைத்தார். அவர் குங்குமம் இட்டதை சரி பார்ப்பதற்காக, அருகே இருந்த குளத்து நீரில் தன் பிம்பத்தைப் பார்த்தாள் சிறுமி வடிவில் இருந்த பாலதிரிபுரசுந்தரி! குளத்தை அவள் குனிந்து பார்த்த சமயத்தில் குங்குமப் பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தன. இதனையடுத்து அந்த குளத்தில் இருந்து சதுர்முக முருகன் தோன்றினார். “இந்த சதுர்முக முருகனே நீ வேண்டும் வரத்தை அருள்வான்’’ என்று விஸ்வாமித்ரரிடம் தெரிவித்து விட்டு அந்த சிறுமி மறைந்தாள்.
சதுர்முக முருகனும், சிறிது தொலைவில் உள்ள கோவிலுக்கு வரும்படி தெரிவித்து விட்டு மறைந்தார். விஸ்வாமித்திரரும் அருகில் உள்ள அந்த கோவிலுக்கு சென்றார். அங்கு பாலதிரிபுரசுந்தரியும், சதுர்முக முருகனும், ஒன்றாகக் காட்சியளிப்பதை பார்த்து மகிழ்ந்தார். அப்போது அங்கு வந்த வசிஷ்டர், விஸ்வாமித்ரருக்கு ‘பிரம்மரிஷி’ பட்டம் வழங்கி ஆசீர்வதித்தார் என்கிறது தல வரலாறு.
தல அமைப்பு:
இக்கோவிலின் அழகிய இராஜகோபுரத்தை அடுத்து முன் மண்டபம் , மகா மண்டபம், அர்த்த மண்டபம் உள்ளன. பின்னர் அதனை தொடர்ந்து கருவறை அமைந்துள்ளது. கருவறையில் மூலவரான சதுர்முக முருகன் சுப்பிரமணிய சுவாமியாக, வள்ளி, தெய்வானையுடன் பொலிவான தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகின்றார் இவரது வலது கரத்தில் சங்கு முத்திரையும், இடது கரத்தில் சக்கர முத்திரையும் உள்ளன. மார்பில், கவுரி சங்கரர் ருத்ராட்சம் சூடப்பட்டுள்ளது.
பிராகாரத்தில் கன்னிமூலையில் கணபதியும், வாயுமூலையில் தண்டாயுதபாணியும், ஈசான்ய மூலையில் பைரவரும் இங்கு சந்நிதி கொண்டிருப்பது சிறப்பாகும். மற்றும் பாலசுப்பிரமணியர், குக்குட சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன.
மகா மண்டபத்தில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து தென் திசை நோக்கி காட்சியளிக்கிறார். . இப்படி நான்கு முகங்களுடன் முருகக் கடவுளைத் தரிசிப்பது மிக விசேஷம். அருகில் பாலதிரிபுரசுந்தரி அம்பிகையும், விஸ்வாமித்திரரும் காட்சியளிக்கிறார்கள். வெளி பிராகாரத்தில் வைஷ்ணவி தேவிக்கும், சதுர்முக ஆஞ்சநேயருக்கும் தனித் தனி சந்நிதிகள் உள்ளன.
.
திருவிழா:
வைகாசி விசாகம், கந்த சஷ்டி (6 நாட்கள்), ஆடிக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், பிரதி சஷ்டி, கார்த்திகை, மிருகசீரிஷம், பூசம், பவுர்ணமி, அமாவாசை, பைரவாஷ்டமி
பிரார்த்தனை:
திருமணத்தடை அகல, குழந்தை வரம், செவ்வாய் தோஷம் நீக்க, அனைத்து நலன்களும் பெற, சங்கடங்கள் தீர
நேர்த்திக்கடன்:
பாலாபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 7-11 மாலை 5-8.30
நான்முகம் கொண்ட சின்னாளப்பட்டி சதுர்முக முருகனை வேண்டி வனங்கினால் நலன்கள் அனைத்தும் அருளுவார்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - நலன்கள் அனைத்தும் அருளும் சின்னாளப்பட்டி சதுர்முக முருகன்
படம் 2 - செவ்வாய் தோஷம் நீக்கும் சின்னாளப்பட்டி சதுர்முக முருகன்
Chinnalapatti Sadhurmuga Muruganuku Arohara. It's interesting to know that our Lord Murugan has four heads statue in this temple. Thanks for this post Iya. Muruga Saranam.
ReplyDelete