கோவில் 20 - தென்காசி ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-20
எடுத்துக் கொண்ட காரியங்களை நிறைவேற்றும் தென்காசி ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
28.6.2021 திங்கள்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
ஆய்க்குடி-627852
தென்காசி மாவட்டம்
இருப்பிடம்: செங்கோட்டை 13 கிமீ
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி (ஹரிராமசுப்பிரமணியர்)
உற்சவர்: முத்துக்குமாரர்
தல விருட்சம்: பஞ்சவிருட்சம் (அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மா விலங்கு)
தீர்த்தம்: அனுமன் நதி
பாடியவர்: அருணகிரியார் திருப்புகழ் (1)
தலமகிமை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 13 கிமீ தொலைவில் அனுமன் நதிக்கரையில் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்ற பிரசித்திப் பெற்ற முருகன் திருத்தலம் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் பாலசுப்ரமணிய சுவாமிக்கு பழப்பாயசம் (படிப்பாயசம்) நைவேத்தியம் செய்து வழிபட்டால் வேண்டும் வரங்கள் விரைவில் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. 1 படி முதல் 12 படி வரையில் அரிசி பாயசம் செய்து குழந்தைகளுக்கு வழங்குவர். திருச்செந்தூர் செல்ல இயலாத தென் மாவட்ட முருக பக்தர்கள் சஷ்டி விரதம் அனுசரித்து தினசரி பூஜையில் கலந்து கொண்டு விரதம் முடிப்பார்கள்.
சைவ வைணவ ஒற்றுமை கருதி ராம பக்தர்களும் முருகனை வணங்குகின்றனர். எனவே முருகப்பெருமான் ஹரிராம சுப்பிரமணியர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு ராமபிரான் வந்து சென்றதாக கூறப்படுவதின் ஐதீகமாக மூலவருக்கு வைணவ ஆகம முறையிலும், உற்சவருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடைப்பெறுகின்றன என்பது இத்தலத்தின் சிறப்பு. சித்திரை மாத பிறப்பு முதல் சில நாட்களுக்கு சூரிய கிரகணங்கள் மூலவர் மீது விழுவது சிறப்பம்சம்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரி பெருமான் தனது திருப்புகழில் ‘வாழ்படச் சேனைப்பட’ என்று (1 பாடல்) பாடி பரவுகிறார்.
இத்தலத்தின் தல விருட்சம் பஞ்சவிருட்சம் ஆகும். அவை அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மா விலங்கு ஆகிய ஐந்து விருட்சங்கள் சேர்ந்தவை பஞ்ச விருட்சம் ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது. அரசு-சூரியன், வேம்பு-அம்பிகை, கறிவேப்பிலை-மகாதேவன், மாதுளை-விநாயகர், மா விலங்கு-விஷ்ணு என பஞ்ச விருட்சங்களும் 5 கடவுளராக வணங்கப்படுகிறது.
தல வரலாறு:
ஆய்க்குடிக்கு அருகிலுள்ள மல்லிபுரம் என்னும் ஊரில் ஒரு குளத்தைத் தூர்வாரும் போது ஒரு முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. பக்தர் ஒருவர் அச்சிலையைத் தன் வீட்டு ஆட்டுத்தொழுவத்தின் அருகே கொட்டகை அமைத்து அதில் வைத்து வழிபட்டு வரலானார். அரசும் வேம்பும் இணைந்து உள்ள இடத்தில் தன்னைக் கொண்டுபோய் வைத்து வழிபடும்படியும் அவ்விடத்தை ஆடு ஒன்று அடையாளம் காட்டும் பக்தரின் கனவில் தோன்றி முருகன் கூறினார். அதன்படியே செம்மறி ஆடொன்று அரசும் வேம்பும் உள்ள ஒரு இடத்துக்குச் செல்ல, பக்தரும் அந்த இடத்தில் ஓலைக் கீற்றால் குடிசை அமைத்து முருகர் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபடலானார். பிற்காலத்தில் அவ்வூரை ஆண்ட அரசர்களால் இக்கோவில் மேம்படுத்தப்பட்டது.
மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார். இன்றும் இக்கோவிலில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு படிப்பாயசம் நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது.
தல அமைப்பு:
திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலகனாக ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் பத்மபீடத்தில் தாமரைப் பூவின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவர் அருகில் உள்ள மயிலின் முகம் இடப்புறம் பார்த்தபடி உள்ளது. மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. மூலவரைப் போலவே அமைந்த உற்சவர் முத்துக்குமாரர் மயில் வாகனத்தில் நின்ற கோலத்தில் அழகிய வடிவுடன் காட்சியருளுகிறார். கோவிலில் அரச இலை திருநீற்றுப் பிரசாதம் வழங்கப்படுகிறது என்பது விசேஷம்.
மூலவருக்கு வலப்புறம் மகாதேவன், மகாவிஷ்ணு, அம்பிகை, விநாயகர் இடப்புறம் சூரியனும் உள்ளனர். பஞ்ச தேவர்கள் சூழ பஞ்ச விருட்சங்களின் கீழ் மூலவர் அமைந்துள்ளார்.
திருவிழா:
கந்த சஷ்டி (6 நாட்கள்), சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், புரட்டாசி விசேஷம், தைக்கார்த்திகை, தைப்பூசம், தை மாதம் பாரி வேட்டை
பிரார்த்தனை:
வேண்டிய வரங்கள் கிடைக்க, எடுத்துக் கொண்ட காரியம் நிறைவேற, குழந்தை பாக்கியம் வேண்டி, கல்வி, கேள்வி, ஞானம், செல்வம் பெருக, சங்கீதம் சிறக்க, நோய்கள் நீங்க, ஆயுள் பலம் கூட
நேர்த்திக்கடன்:
படிப்பாயசம், பால்குடம், காவடி, முடிகாணிக்கை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், லட்சார்ச்சனை, அன்னதானம், உறுப்புகள் வெள்ளியில் காணிக்கை, திருப்பணி பொருளுதவி
திறக்கும் நேரம்:
காலை 5.30-11 மாலை 5-8
வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமியை பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - எடுத்துக் கொண்ட காரியங்களை நிறைவேற்றும் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி
படம் 2 - வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி
Aykkudi Bala Subramaniya Swamiku Arohara. It's interesting to know that there are about 5 thala Virutcham in this temple. Thanks for this post Iya. Muruga Saranam
ReplyDelete