கோவில் 19 - வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-19
தீராத குறைகளையும் தீர்க்கும் வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவில்
27.6.2021 ஞாயிறு
அருள்மிகு தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோவில்
புது வசூர்
வேலூர்-632009
இருப்பிடம்: வேலூரிலிருந்து கோவில் 8 கிமீ
மூலவர்: வடிவேல் சுப்பிரமணியர்
தேவி: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: அத்தி மரம், ஆலமரம், அரச மரம், நாவல்மரம்
தீர்த்தம்: தீர்த்தகிரி
தலமகிமை:
சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து 6 கிமீ. தொலைவில் உள்ள சத்துவாச்சாரி அருகே இருக்கும் வள்ளலார் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அதன் தென்புறம் 2 கிமீ-ல் உள்ள புது வசூரில் இருக்கும் மலை மீது தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இருப்பதாக கூறப்படுவது சிறப்பம்சம்.
முருகன் சிலைக்கு சரி சமமான உயரத்தில் வள்ளி சிலை இருப்பது எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு தீர்த்தகிரியில் உண்டு. வள்ளியை மணம் முடிக்கும் முன் முருகன் இளைப்பாறிய மலை என்ற சிறப்பு கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோவில். வள்ளியை மணம் புரிய விரும்பிய முருகப்பெருமான், வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை நோக்கிச் சென்றபோது, இந்த மலையில் சிறிது நேரம் இளைப்பாறி, பாதம் பதித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக முருகப்பெருமானின் பாதச்சுவடுகள் இன்றும் இந்த ஆலயத்திற்கு படியேறிச் செல்லும் பாதையில் அமைந்துள்ளன.
ஆலயத்தின் மேற்கே ஆலமரம், கிழக்கே அத்திமரம், தென்கிழக்கே அரசமரம், வட கிழக்கே தல மரமான நாவல்மரம் என நான்கு தல விருட்சங்கள் இருப்பது இத்தலத்து சிறப்பம்சம். ஆலமரத்தின் அடியில் பாறையின் கீழே இன்றும் சுனைத் தீர்த்தம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே இத்தலம் தீர்த்தகிரி என வழங்கப் படுகிறது. இத்திருக்குளத்தில் முருகப்பெருமானின் தெப்ப உற்சவம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
குழந்தை இல்லாதவர்கள், மற்றும் கல்யாணம் ஆகாதவர்கள் விரதங்கள் கடைபிடித்து பிரார்த்தனை செய்தால் உடனே நிறைவேறும். அனைத்து நோய்களையும் தீர்ப்பவர். வேலைவாய்ப்பு என வேண்டிய வரத்தை அள்ளித்தரும் வள்ளலாக விளங்குகிறார். ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருத்திகைக்கு முதல்நாள், மறுநாள் என இரண்டு நாட்கள் விழா நடைபெறுகிறது. இது தவிர நவம்பர் 18 ஆண்டு விழா பவுர்ணமி, கிருத்திகை, பிரதோஷம், கந்த சஷ்டி (6 நாள்), பங்குனி உத்திரம், பால்குட அபிஷேகம், விளக்கு பூஜை போன்ற விழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
தல அமைப்பு:
வசூரை ஒட்டிய மலைக்கூட்டத்தில் சிறியமலை மீது முருகப்பெருமானின் ஆலயம் உள்ளது. மலையடிவாரத்தில் செல்வவிநாயகர் சந்நிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அதன் எதிரில் பெரிய அளவிலான திருக்குளம் இருக்கிறது. செல்வ விநாயகர் சந்நிதியில் இருந்து மலையேறும் படிகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கான பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. 222 படிகள் ஏறினால் மலை உச்சியை அடையலாம். பத்துப்படிகள் ஏறியதுமே வலதுபுறம் முருகப்பெருமானின் திருவடிகள் காட்சி தருகின்றன. அடுத்து நாகர் கோவில், முருகனின் பணிவிடைப் பெண்கள் என்றுகூறப்படும் கன்னிமார்கள் சந்நிதி இடதுபுறம் அமைந்துள்ளது. அதன் வலப்புறம் விழுதுகள் இல்லாத கல்லால மரம் காட்சி தருகின்றது.
இவ்வாலயத்தின் மூலவரின் திருநாமம் வடிவேல் சுப்பிரமணியர். முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையோடு கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். முருகப்பெருமானும், வள்ளியம்மையும் சம அளவான உயரத்திலும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். காதலித்து மணம் முடித்த முருகப்பெருமான், காதலியான வள்ளியை சம உயரத்தில் வைத்துப் பார்த்துள்ளது ஒரு புதிய அனுபவமாக உள்ளது. இதனாலோ என்னவோ இத்தலத்தில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன.
கோவிலுக்குள் அன்னை விசாலாட்சி சமேத காசி விசுவநாதர், மகாவிஷ்ணு, அன்னபூரணி, சரஸ்வதி, மகாலட்சுமி, மகா துர்க்காதேவி, பெருமாள், துவாரபாலகர்கள் வாகனங்களுடன் கூடிய நவக்கிரகங்கள், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், வேங்கடேசப் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்
திருவிழா:
ஆடிக்கார்த்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம், கிருத்திகை, பவுர்ணமி, பிரதோஷம்
பிரார்த்தனை:
பிரச்னைகள் தீர, குழந்தை வரம், கல்யாணம் வரம், நோய்கள் தீர, வேலை வாய்ப்பு
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 7-1 மாலை 3.30-7.30
வேண்டும் வரங்களை அள்ளித் தரும் வள்ளல் வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியரை மனக்கண்ணால் தரிசிப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - தீராத குறைகளையும் தீர்க்கும் வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர்
படம் 2 - வேண்டும் வரங்களை அள்ளித் தரும் வள்ளல் வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர்
Velore theerthagiri subramanianuku arohara. It's a nice learning about the fact that Valli Amma and Lord Murugan are on the same level in terms of statute. It's interesting to know there are Athi, Ala maram, Arasa maram and Naval maram. Thanks for this post Iya. Muruga Sarananam.
ReplyDelete