கோவில் 18 - திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-18
குழந்தைகளைக் காக்கும் திருவுருமாலை என்று சிறப்பிக்கப்படும் திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில்
26.6.2021 சனி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
குறுக்குத்துறை
திருநெல்வேலி-627001
இருப்பிடம்: திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம்/ரயில் நிலையம் 2.5 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தீர்த்தம்: தாமிரபரணி
தலமகிமை:
திருநெல்வேலி நகரத்தில் குறுக்குத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் குறுக்குத்துறை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த முருகனை தரிசித்தால், பழநி மலை முருகனையும், திருச்செந்தூர் முருகனையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.
குறுக்குத்துறையில் உள்ள பாறைப்பகுதிக்கு `திருவுருமாமலை' என்று பெயர். இங்குள்ள கற்பாறைகள் தெய்வ திருவுருவங்களை செதுக்கிட ஏற்றதாக இருந்ததால், இங்கு சிற்பிகள் பாறைகளை செதுக்கி உருவம் கொடுத்தார்கள் என்பதால் திருவுருமாமலை என்ற பெயர் வழங்கப் பெற்றது. திருச்செந்தூரில் கருவறையில் உள்ள முருகனின் சிலையும், இங்குள்ள முருகன் சிலையும் ஒரே பாறையில் வடிக்கப்பட்டவை. அதனால் திருச்செந்தூரைப் புகுந்த வீடு என்றும், குறுக்குத்துறை கோவிலைத் தாய்வீடு என்பார்கள் பக்தர்கள்.
மேலக் கோவில் சிறப்பு: இந்தக் கோவில் தாமிரபரணி ஆற்றின் நடுவே அமையப் பெற்றுள்ளதால், மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது குறுக்குத்துறை கோவில் முழுவதும் தண்ணீரில் மூழ்கி விடும். இதற்காக இந்த கோவிலின் மேற்கே சுமார் 1 கிமீ தொலைவில் ஊருக்குள் ஒரு தனிக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதுவே மேலக் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் முன்புறம் அலங்கார மண்டபம் காட்சியளிக்கிறது. அதனை தாண்டி உள்ளே சென்றால் இங்கும் கருவறையில் சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் செந்தூர் முருகனை போன்றே காட்சித் தருகிறார். மழை காலங்களில் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்டு விட்டால் கீழக் கோவிலில் இருக்கும் உற்சவர் சுப்பிரமணியர் மற்றும் ஆறுமுகப் பெருமானை இந்த மேலக் கோவிலுக்கு எழுந்தருள செய்து நித்ய பூசைகள் நடைபெறும்.
படகு போன்ற அமைப்பு: இங்குள்ள திருக்கோவில், தாமிரபரணி ஆற்றின் நடுவே அமையப் பெற்றுள்ளது. பல வருடங்களாக ஆற்றின் வெள்ளத்தை தாக்கு பிடித்து எந்தவித பாதிப்புகளும் இன்றி கம்பீரமாக காட்சித் தருகிறது. பெருகி வரும் வெள்ளத்தை கிழித்து பிரிக்கும் வகையில், இந்த கோவிலின் மேற்கு பகுதி மதிற் சுவர் படகின் முனை போல கட்டப்பட்டு இருக்கிறது. இதனால் வெள்ளம் வந்து மோதும் போது இந்த கூர்மையான சுவரில் பட்டு சிதறி ஓடி விடும் என்பதால்., கோவிலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.
வேலவனின் அதிசய நிகழ்வு: தாமிரபரணி நதியின் நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் இருக்கும் மூலவர், உண்டியல், நகைகள், சப்பரம் உள்ளிட்டவற்றை நதியில் ஏற்படும் வெள்ளத்தின்போது அருகில் இருக்கும் கோவிலுக்குத் தூக்கிச் செல்வார்கள். வெள்ளம் வடிந்தபிறகு கோவிலைச் சுத்தம் செய்து மீண்டும் கொண்டுவந்து வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்
இங்குள்ள சுப்பிரமணியர், திருச்செந்தூர் முருகனுக்கும் முதல்வர் என்பதால், திருச்செந்தூருக்கு நேர்ந்து கொண்ட, நேர்த்தி கடன்களை இங்கு செலுத்தி வழிபடலாம் என கூறப்படுகிறது. இங்கு திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு நடைபெறுவதை போன்றே வருடத்திற்கு இரண்டு திருவிழாக்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் ஆவணி மற்றும் மாசி மாதம் இரண்டு முறை திருவிழா என்றால் இங்கு சித்திரை மற்றும் ஆவணி மாதம் இரண்டு முறை திருவிழா நடைபெறுகிறது.
இங்கு சித்திரை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும். ஆவணி மாதம் கொடியேற்றி பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். ஒன்பதாம் நாள் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத் திருவிழா அன்று கருவறை சுப்பிரமணியருக்கு தங்கக்கவசம் சாத்தப்படும்.
இங்கு நடைபெறும் ஆவணி மற்றும் சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளன்று ஆறுமுகப்பெருமான் தங்கச் சப்பரத்தில், சிவப்பு சாத்தி கோலம் பூண்டு திருநெல்வேலி மாநகருக்கு எழுந்தருளுவார். அப்போது திருப்பணி முக்கில் வைத்து ஆறுமுகப்பெருமானுக்கு வைரக் கிரீடமும், வேலும் சாத்தப்படும். பின்னர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேர் வீதிகளில் உலா வந்து மறுநாள் காலை வெள்ளிச் சப்பரத்தில், வெள்ளை சாத்தியாகி, மாலை பச்சைக் கடைசல் சப்பரத்தில், பச்சை சாத்தியாகி தேர் வீதிகளில் உலா வந்து குறுக்குத்துறை சேர்வார்.
திருமணத் தடை உள்ளவர்கள், இந்தத் தல முருகனுக்குப் பாலாபிஷேகம் செய்து, அரளி மாலை சாத்தினால் விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைகளுக்கு தோஷம் இருப்பதாகக் கருதுபவர்கள் இங்கு வந்து முருகனுக்கு முன்னால் கருப்பட்டிக்கும், தவிட்டுக்கும் விற்றுப் பிறகு வாங்கிக்கொள்கிறார்கள். இப்படிச் செய்தால் குழந்தைகளின் தோஷம் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
தலவரலாறு:
முற்காலத்தில் திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள பகுதியில் காணப்படும் கல் பாறைகள் தெய்வ திருவுருவங்களை வடிப்பதற்கு ஏற்றதாக இருந்துள்ளது. இங்குள்ள பாறையில் இருந்துதான் திருச்செந்தூர் கோவிலின் மூலவர் திருவுருவம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி திருச்செந்தூர் முருகனை உருவாக்கிய சிற்பி, பின்னர் வள்ளி, தெய்வானை உடன் கூடிய மற்றொரு முருகன் விக்ரகம் செய்ய நினைத்து, இங்கிருந்த கல் பாறை ஒன்றில் வள்ளி, தெய்வானை உடன் கூடிய முருகனின் திருவுருவை செதுக்கினார். ஆனால் என்ன காரணத்தாலோ அந்த பணி முழுமை பெறாமல் முருகன் சிற்பமானது கல் பாறையில் செதுக்கப்பட்ட கோலத்திலேயே தங்கி விட்டது. பின்னர் வந்த நாட்களில் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக இந்த வழியாக வந்த போது, கல் பாறையில் செதுக்கப்பட்டிருந்த முருகனின் சிற்பத்தைக் கண்டார். முருகனின் அழகிய அந்த திருவுருவை கண்டதும் அந்த அம்மையார், தூய பக்தியோடு தினமும் அங்கு வந்து அந்த முருகனின் திருவுருவத்திற்கு வழிபாடுகள் செய்து வந்தாராம். அவரை தொடர்ந்து ஆற்றுக்கு நீராட வந்தவர்கள் பலரும் இந்த முருகனை வழிபடத் தொடங்கிட., நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்திட, சிறிது சிறிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த பாறையை ஒட்டி சிறிய கோவில் கட்டப்பட்டது. பின்னர் இந்த திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
திருச்செந்தூர் முருகன் விக்ரகத்தை போன்றே சிற்பியால் பாறையில் வடிவமைக்கப்பட்ட திருமேனி இங்குள்ள மேலக் கோவிலில் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதனால் திருச்செந்தூர் முருகனின் சாந்நித்யம் பெற்றவர் இத்தல சுப்பிரமணியர் என்றும் கூறப்படுகிறது.
தல அமைப்பு:
இத்திருக்கோவிலில் இரண்டு மூலவர்கள் இருப்பது தனிசிறப்பு
மூலவர் சுப்பிரமணிய சுவாமி:
இங்கு கருவறையில் பாறையில் குடையப்பட்ட திருமேனியாக சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை உடன் நான்கு கரங்கள் கொண்டு நின்ற கோலத்தில் காட்சித் தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள முருகப்பெருமான், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி போலவே கையில் மலர் ஏந்தி சிவ பூஜை செய்யும் கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு.
மேலக் கோவில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி:
இங்கு கருவறையில் சுப்பிரமணிய சுவாமி. வலது மேல் கரத்தில் வஜ்ஜிராயுதம் தாங்கியும், வலது கீழ்க் கரத்தில் மலர் ஏந்தியும், இடது மேல் கரத்தில் ஜெபமாலை கொண்டும், இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்த நிலையிலும் நின்ற கோலத்தில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்
தாமிரபரணி ஆற்றின் வட கரையில் கிழக்கு நோக்கி அமையந்துள்ள இக்கோவிலின் முகப்பில் மூன்று நிலை ராஜ கோபுரம் உள்ளது. இந்த ராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் மணி மண்டபம், கொடிமரம், பலி பீடம், மயில் வாகனம் ஆகியன உள்ளன. அடுத்து உள்ளே நுழைந்தால் மூலவர் சந்நிதிக்கு தெற்கே விநாயகரும், வடக்கே சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். அடுத்து அர்த்த மண்டபம் மற்றும் குடைவறை கருவறை உள்ளது. கருவறையின் இருபுறமும் துவார பாலகர்கள் இருக்க உள்ளே பாறையில் குடையப்பட்ட திருமேனியாக சுப்பிரமணியர் காட்சித் தருகிறார். கருவறைக்கு முன்புற மண்டபத்தில் வடக்கே நெல்லையப்பர், காந்திமதி அம்மை, நடராசர், விநாயகர் ஆகியோரும் காட்சித் தருகின்றனர். மகா மண்டபத்தின் வடக்கே தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் வள்ளி, தெய்வானை உடனுறை ஆறுமுகப் பெருமான் காட்சித் தருகிறார். கருவறை பாறையை சுற்றி பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், சுப்பிரமணியர், சனீஸ்வரர், பஞ்ச லிங்கங்கள், சண்டிகேசுவரர் பைரவர் ஆகியோரும் காட்சித் தருகிறார்கள்.
திருவிழா:
சித்திரை மற்றும் ஆவணி திருவிழா (10 நாள்), திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம்
பிரார்த்தனை:
செவ்வாய் & இதர தோஷம் நீங்க, திருமணத் தடை, குழந்தைகளை காத்தருள
நேர்த்திக்கடன்:
தேரோட்டம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றல்
தோஷங்கள் அகற்றியருளும் திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25 🙏🙏
படம் 1 - குழந்தைகளைக் காத்தருளும் திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி வைரக்கிரீட அலங்காரத்தில்
படம் 2 - மக்களை காக்க ஆற்றுக்குள் கெத்தாக நிற்கும் திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன்
Thirunelveli Kurukuthurai muruganuku arohara. Thanks for this post Iya. It's a nice learning about this temple. It's wonderful to know that the statute structure of this temple's Murugan resembles Thiruchendur Murugan Temple. Muruga Saranam.
ReplyDelete