கோவில் 16 - தக்கலை குமாரகோவில் (வேளிமலை) குமார சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                       தினம் ஒரு முருகன் ஆலயம்-16

முன் வினைகள் அகற்றும் தக்கலை குமாரகோவில் (வேளிமலை)  குமார சுவாமி கோவில்

24.6.2021 வியாழன்

அருள்மிகு குமார சுவாமி திருக்கோவில்

குமாரகோவில் (வேளிமலை)-629175  

தக்கலை

கன்யாகுமரி மாவட்டம் 

இருப்பிடம்: தக்கலை 5 கிமீ, நாகர்கோவில் 13 கிமீ 


மூலவர்: குமார சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: மணவாள குமரன் 

தல விருட்சம்: வேங்கை மரம்

தீர்த்தம்: தெப்பக்குளம்

புராணப் பெயர்: வேளிமலை

ஊர் பெயர்: குமாரகோவில்


தலமகிமை:

கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-மார்த்தாண்டம் சாலையில் தக்கலை எனும் ஊரில் அமைந்துள்ள குமாரகோவில் என்ற வேளிமலை தலத்தில் சிறப்பு மிக்க குமார சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடந்தபோது, அதற்காக வேள்வி நடைபெற்ற மலை வேள்விமலை எனக் கூறப்படுகிறது. வேள்விமலையே பின்னாளில் வேளிமலையானது என்கின்றனர்.


முருகப்பெருமானின் திருமண வைபவம் நடந்த அந்த இடத்திலே இன்று ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. வள்ளியும் குமரனும் மணம் புரிந்த தலம் என்பதால், பக்தர்கள் இந்தச் சந்நிதியில் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். தமிழகம் மட்டுமல்ல கேரளத்திலிருந்தும் பக்தர்கள் இங்கு மணம் புரியக் குவிகிறார்கள். திருமண வரம் வேண்டும் அன்பர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்ள, விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்கிறார்கள் பக்தர்கள்.


தலவிருட்சமான வேங்கை மரத்துக்கெனத் தனி சந்நிதி  அமைந்துள்ள தலம் இதுவாகும். முருகன் வள்ளியை மணம் புரியவிருந்த நேரத்தில் வள்ளியின் உறவினர் தினைப்புனம் நோக்கித் திரண்டுவர, வேங்கை மரமாக முருகப்பெருமான் மாறினார். புதியதாக ஒரு மரம் நிற்கவே அதனை அவரது உறவினர் வெட்டி விட்டனர் என்று சொல்லப்படுகிறது. வேங்கை மரத்தின் எஞ்சிய பகுதிக்கு வஸ்திரம் சார்த்தி இன்றும் தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன. 


இக்கோவிலில் தட்சனுக்கு தனி சந்நிதி  உள்ளது. சிவபெருமானை அழைக்காமல் தட்சன்  யாகம் செய்தான். அவனது ஆணவத்தால் யாகம் அழிந்ததும், தட்சனும் அழிந்து  ஆட்டுத் தலையுடன் விமோசனம் அடைந்தான். ஆட்டுத் தலையுடன் உள்ள தட்சனே இந்த  சந்நிதியில் காட்சி தருகிறார். 


இக்கோவிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் வள்ளிக்குகை உள்ளது. அருகிலேயே விநாயகருக்கு ஒரு சிறுகோவில் உள்ளது. வள்ளிக் குகை அருகிலேயே தினைப்புனம், வள்ளிசோலை, வட்டச்சோலை, கிழவன் சோலை என்றழைக்கப்படும் இடங்கள் அமைந்து உள்ளன. வள்ளி நீராடிய சுனை அருகே பாறையில் விநாயகர், வேலவர், வள்ளி சிற்பங்கள் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 


ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் முதல் கந்த சஷ்டி விரதத்துக்குக் காப்புக் கட்டி ஆறாவது நாள் சூரசம்ஹாரம் நடைபெறும். திருக்கார்த்திகை தீபம் சொக்கப்பனை, கார்த்திகை கடைசி வெள்ளிக் காவடி, மார்கழி சுசீந்திரம் தேரோட்டத்தையொட்டி மக்கள் மார் சந்திப்புக்கு முருகன் செல்லுதல், தைப்பூசம் திருக்கல்யாண கால் நாட்டும், 


பங்குனி அனுஷ நட்சத்திரத்தில் இரவு திருக்கல்யாணம் நடைபெறும். இந்தத் திருக்கல்யாணத்துக்கு முன்பு நடைபெறும் குறவர் படுகளம் சிறப்புடையது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கிறது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6.30க்கு முருகப்பெருமானுக்கும் வள்ளி நாயகிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கும். இரண்டாவது நாள் காலை 5.30க்கு முருகப்பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வள்ளிக்குகை அருகில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு செல்வார். பிற்பகல் முருகன், வள்ளியைப் பல்லக்கில் அழைத்து வருவார்கள். அதைக் காணும் குறவர்கள், முருகனையும், வள்ளியையும் தடுத்து நிறுத்திப்போர் புரிவார்கள். பினர் சமாதானம் ஆகி தொடர்ந்து இரவு 7 மணிக்கு முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் திருக்கல்யாண முகூர்த்தம் நடக்கும். அப்போது தேன், தினைமாவு. அமிர்தம், லட்டு, மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். இரவு சுவாமி வெள்ளிக்குதிரையிலும், அம்மன் பூப்பல்லாக்கு வாகனத்திலும் எழுந்தருளுவார்கள். வழியெங்கும் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள். தீபாராதனைக்குப் பின் அன்னதானம் நடக்கும்.


தலவரலாறு:

திருமால் சிவதவமுனியாக இருக்கும் போது திருமகள் மான் வடிவு கொண்டு அங்கு வந்து நின்றாள். கருவுற்ற மான், வள்ளிக்கிழங்கு அகழ்ந்தெடுத்த குழியில் அழகிய பெண் குழந்தையை ஈன்றது.  வள்ளிக்கிழங்கு செடியில் குழந்தை கிடந்ததை கண்டெடுத்த அப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் நம்பிராஜன், அக்குழந்தைக்கு வள்ளி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். வள்ளி தக்க பருவம் வந்ததும் வேடுவர் குல வழக்கப்படி வள்ளி தினைப்புனம் காத்து நின்றாள். இந்த செய்தியை நாரதர், முருகனிடம் கூற, முருகனும் தினைப்புனம் நோக்கி சென்றார்.


வேடனாக, வேங்கை மரமாக, விருத்தனாக உருமாறி வந்த முருகன் வள்ளியுடன் ஊடல் பல புரிந்தார். இதை பார்த்து வள்ளி வெகுண்டு நிற்கும்போது  தனது அண்ணனான விநாயக பெருமான் துணையோடு வள்ளியை காந்தரூப முறைப்படி திருமணம் செய்வதற்காக முருகன், தனது சுய உருவை காட்டினார். வள்ளியும் தனது பிழையை பொறுத்தருளுமாறு வேண்டினாள், முருகன் வள்ளியை மணமுடித்துக்கொண்டார். முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் காதல் வேள்வி நடந்த இடம் என்பதால், இந்த தலம் வேள்விமலை என்று அழைக்கப்பட்டது.  பிற்காலத்தில் அந்த வார்த்தை மருவி வேளிமலையாக மாறிவிட்டது. முருகப் பெருமானுக்கும், வள்ளிக்கும் இங்குதான் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகின்றது.


தல அமைப்பு:

மூலவரின் சந்நிதி வாசலில் வீரபாகுவும் வீர கந்தர்வரும் கம்பீரமான தோற்றத்தோடு துவார பாலகர்களாக நிற்கிறார்கள். அவர்களை வணங்கி உள்ளே நுழைந்தால், கருவறையில் கம்பீரமாக முருகப்பெருமான், குமார சாமி என்ற திருப்பெயருடன்  எட்டரை அடி உயரத்தில் நீண்ட நெடிய திருமேனியனாகக் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானின் இடப்பக்கம் வள்ளியம்மையின் உருவச்சிலை 6 அடி 8 அங்குலத்தில் உள்ளது. உட்புறப் பிராகாரத்தில் வலம் வரும்போது தென்மேற்கு மூலையில் வள்ளி, தெய்வானையுடனும் விநாயகர் சாஸ்தாவுடனும் வேலவர் இளைய நாயனாராக இருந்து அருளுகிறார். இந்தச் சந்நிதியில் தரிசனம் காணும் பக்தர்களுக்கு வாழை இலையில் சந்தனமும் திருநீறும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. 


மேற்குப் பிராகாரத்தில் காசி விசுவநாதர் காட்சியளிக்கிறார். வடமேற்கில் உற்சவ மூர்த்தியாக இருக்கும் மணவிடைக் குமாரர் சந்நிதி  அமைந்துள்ளது. இவரே நவராத்திரியின்போது திருவனந்தபுரத்துக்கும், மார்கழித் திருவிழாவின்போது சுசீந்திரத்துக்கும் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்பவர். வடக்குப் பிராகாரத்தின் இறுதியில் வள்ளி தெய்வானை சமேதராக ஷண்முகராக ஆறுமுக நயினார் விளங்குகிறார். ஆறுமுக நயினாரும் நடராஜரும் அடுத்தடுத்து தெற்கு நோக்கி காட்சி தருகின்றனர். தேவஸ்தானத்தின் பக்கத்தில் வேளி மலை என்று அழைக்கப்படும் மிகப் பெரிய மலை ஒன்று உள்ளது. அதில் வள்ளி நாயகியின் குடும்ப பாரம்பரியம் உள்ள வேடுவர் இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். மேலும் வள்ளி நாயகி காத்த தினை புனம் (வள்ளிச் சோலை, வட்டச் சோலை) முதலியவையும் முருகப்பெருமான் கிழவனாக காட்சியளித்த கிழவன் சோலையும் முருகப்பெருமானும், வள்ளியும் குளித்த குளம் (சுனை) அடங்கியதும், முருகப் பெருமானுக்கு திருமணம் நடத்தி வைத்த கணபதி கல்யாண விநாயகராகவும் வீற்றிருப்பது இத்திருக்கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும். 


திருவிழா:

வைகாசி விசாகம் (10 நாள்), பங்குனி உத்திரம் (7 நாள்), ஆவணி வெள்ளி (புஷ்பாஞ்சலி)  தைப்பூசம்,  பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, பிரதி கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

முன் வினைகள் அகன்றிட, வளம் பல பெற, வேண்டியவை நிறைவேற, திருமண, குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், மன பலம், உடல் பலம், வியாபாரம் விருத்தி, உடற்பிணி விலக


நேர்த்திக்கடன்:

கிரிவலம், பால்குடம், காவடி, முடி காணிக்கை, துலாபாரம் செலுத்தல், நெய் விளக்கு ஏற்றல்,  பால்/பஞ்சாமிர்த அபிஷேகம்,சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-11 மாலை 4-8


வேண்டியவற்றை அள்ளி வழங்கும் வள்ளல் தக்கலை குமாரகோவில் (வேளிமலை)  குமார சுவாமியை தரிசித்து மகிழ்வோம்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - முன் வினைகள் அகற்றும் தக்கலை குமாரகோவில் (வேளிமலை)  8 1/2 அடி உயர குமார சுவாமி



படம் 2 - வேண்டியவற்றை அள்ளி வழங்கும் வள்ளல் தக்கலை குமாரகோவில் (வேளிமலை)  குமார சுவாமி


Comments

  1. Velimalai Kumarasamiku Arohara. Thanks for this post Iya. It's interesting to learn about temple history as well as about this place where Lord Murugan and Valli Amma got married. It's surprising to learn that there is Thatchan statue in this temple. It's astonishing to know that our Lord Murugan statue is 8 and half feet. Muruga Saranam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்