பகுதி 355 - இலங்கை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-355
பிதிர் கடனை நிறைவேற்ற அருளும் இலங்கை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவில்
29.5.22 ஞாயிறு
அருள்மிகு சித்திர வேலாயுத சுவாமி திருக்கோவில்
திருக்கோவில்
அம்பாறை மாவட்டம்
இலங்கை
மூலவர்: சித்திர வேலாயுத சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சிவபூமி என்றும் பூலோக சொர்க்கம் என்றும் போற்றப்படும் இலங்கைன் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தென்கிழக்கு திசையில் 71 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிகு திருக்கோவில் என்னும் ஊரில் தொன்மைமிகு நாகர்முனை கந்தபாணத்துறை ஆறுமுகன் ஆலயமே இன்றைய திருக்கோவில் சித்திரவேலாயுதர் சுவாமி கோவிலாகும். இவ்வாலயம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் 2012-ல் புனரமைக்கப்பட்டது.
திருக்கோவில் என்ற பெயர், சாதாரண வழக்கில், சைவ, வைணவத் தமிழரால், வழிபாட்டு இடத்தைக் குறிக்கம். மட்டக்களப்புப் பகுதியில் ஆகம விதிப்படி எழுந்த முதலாவது இறைகோட்டம் என்ற பொருளிலேயே, இ்க்கோவிலுக்குத் திருக்கோவில்" என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. கோவில் மட்டுமன்றி, இங்கு ஊரே திருக்கோவில்" என்று அழைக்கப்படுவது, இந்தியத் திருத்தலங்களுக்குக் கூட இல்லாத பெருமையாகவும், புனிதமாகவும் கருதப்படுகின்றது)
இவ்வாலயம் மூன்று கோபுரங்களைக் கொண்டிருந்ததால், "திரிகோவில்" என்று தமிழிலும், "துங்கோள" என சிங்களத்திலும் அழைக்கப்பட்டதாக இன்னொரு குறிப்புச் சொல்கின்றது. திருக்கோவில் எனப் பெயர் சூட்டப்படும் முன்பு, இத்தலத்தின் பெயர், "நாகர்முனை" என்பதாகும். கிழக்கிலங்கைச் சரித்திர நூலாகக் கொள்ளப்படும் மட்டக்களப்பு மான்மியம் கூட, இக்கோவிலை, "நாகர்முனை" என்றும், "கண்டபாணத்துறை" அல்லது "கந்தபாணத்துறை" என்றும் அழைக்கின்றது. ஈழத்துப் பழங்குடிகளான இயக்கர், நாகர் என்போரில், நாகர்கள் பெருமளவு வசித்துவந்ததால், இப்பகுதி "நாகர்முனை" எனப் பெயர்பெற்றிருக்கின்றது. கந்தபாணத்துறை என்பது, கந்தனின் பாணமான வேல் கோவில் கொண்ட துறைமுகம் ஆகலாம்.
முழு மட்டக்களப்புத் தேசமுமே உரிமை கொண்டாடிய கோவில் என்பதால், இது ""தேசத்துக் கோவில்" என்று அழைக்கப்பட்டது. இது தேசத்துக் கோவில் மாத்திரமன்றி, இந்தத் திருக்கோவில் திருப்படைக் கோவில்களிலும் ஒன்றாகும். திருப்படைக் கோவில் என்பது, மட்டக்களப்புச் சிற்றரசரின் மானியம் பெற்று வந்த பழம்பெருமை ஆலயங்களாகும். தான்தோன்றீச்சரம், சித்தாண்டி, மண்டூர், உகந்தை, கோவில் போரதீவு, வெருகல், திருக்கோவில் ஆகிய ஏ்ழு ஆலயங்களும், ஏழு திருப்படைக்கோயில்களாகும். இவற்றில் தான்தோன்றீச்சரம் தவிர்ந்த ஆறும் முருகன் கோவில்கள் என்பது சிறப்பு.
திருக்கோவில் ஆலயத்தின் திருவிழா, ஆடி அமாவாசைக்கு பதினெட்டு நாட்கள் முன்தொடங்கி, அமாவாசை அன்று, தீர்த்தோற்சவத்துடன் நிறைவுறுகின்றது. ஆடி அமாவாசையன்று, இலட்சக்கணக்கில் திருக்கோவிலில் அடியார் கூடும் இந்நிகழ்வு, தென்கிழக்கிலங்கையில் "தீர்த்தம்" அல்லது "தீர்த்தக்கரை" என்றே அறியப்படுவதுடன், திருக்கோவில் தீர்த்தத்தில் நீராடுவது, புண்ணியம் சேர்க்கும் என்பது நம்பிக்கையும்.
தலவரலாறு:
சூரனை சம்ஹாரம் செய்து முருகனின் ஞானவேலில் இருந்து தோன்றிய மூன்று பொறிகளில் ஒன்று நாகர்முனையில் இயற்கை தடாகத்தின் வெள்ளை நாவல் மரத்தில் தங்கியதாக திருக்கோவில் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலை இலங்கை வேந்தன் இராவணன் வழிபட்டு வந்ததாகவும், இவனது இலங்காபுரி கோட்டை அழிந்த நிலையில் அதன் சின்னங்கள் திருக்கோவிலுக்கு கிழக்கே காணப்படுவதாகவும் வித்துவான் வி.சீ.கந்தையா கூறியுள்ளதாக தேரோடும் திருக்கோவில் எனும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தல அமைப்பு:
கோவில் கர்ப்பகிரகத்தில் முருகப்பெருமான், சித்திர வேலாயுத சுவாமியாக தேவியர் ச்மேதராக கட்சி தந்து அருள்பாலிக்கின்றார். கோவிலின் மூலஸ்தானத்தில் முருகனது படையாகிய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களே திருப்படைக் கோயில்களாகும். முருக வழிபாட்டின் தோற்றமாக வேல் வழிபாடு அமைந்திள்ளது. மேலும் உபதெய்வங்கள் கோவில் வளாகக்தில் அருள்வது சிறப்பு.
திருவிழா:
கந்த சஷ்டி சூரசம்ஹாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம், தை முதல் நாள்
பிரார்த்தனை:
பிதிர் கடனை நிறைவேற்ற, புத்திர பாக்கியம் கிட்ட
நேர்த்திக்கடன்:
அன்னதானம், அபிஷேகம், அலங்காரம், பூஜைகள்
இலங்கை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமியை தொழுது வேண்டினார் புத்திர பாக்கியம் கிட்டும்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - பிதிர் கடனை நிறைவேற்ற அருளும் இலங்கை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி
Comments
Post a Comment