கோவில் 354 - இலங்கை முல்லைத்தீவு குமாரபுரம் சித்திர வேலாயுத சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-354
எண்ணிய எண்ணங்கள் நிறைவேற்றும் இலங்கை முல்லைத்தீவு குமாரபுரம் சித்திர வேலாயுத சுவாமி கோவில்
28.5.22 சனி
அருள்மிகு சித்திர வேலாயுத சுவாமி திருக்கோவில்
குமாரபுரம்
முல்லைத்தீவு மாவட்டம்
இலங்கை
மூலவர்: சித்திர வேலாயுத சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கையின் வடக்கே வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் குமாரபுரம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் முருகப்பெருமானுக்கு அர்ப்பணித்த கோவிலாகும்.
இந்தக் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தத் திருத்தலத்தில்தான் சூரசம்ஹாரம் நிகழ்வு முதன் முதலில் நடைபெற்றது என்பது வரலாற்றின் சிறப்பம்சம்.
வரலாற்றுப் புகழ் வாய்ந்த குமாரபுரம் சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் உருவாகி கொண்டிருக்கும் 31 ½ அடி உயர சித்திரத்தேருக்கு பவளக்கால் வைக்கும் வைபவம் 17.2.2022 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அன்னதானம் சிறப்பாக நடந்தேறியது. புதிய வசந்த மண்டபம் கட்டப்படுகிறது,
தலவரலாறு:
வன்னிய மன்னர்களாட்சியில் நிர்மாணிக்கப்பட்ட புராதன ஆலயங்களுள் குமாரபுரம் சித்திரவேலாயுத சுவாமி மிகவும் பழமையானது. தனியூற்றின் கீழ்ப்பாலமைந்த குமாரபுரம் பகுதி அக்காலத்துத் “தண்ணீர் முறிப்பு” என வழங்கப்படினும் முற்காலத்தில் பெரிய “குருந்தனூர்க்குளம்” என்ற பெயரால் வழங்கப் பெற்றது. நாகதீபத்தை தரிசித்த புத்தர் இப்பகுதியிலுள்ள தண்ணிமுறிப்பு குளக்கட்டு வழியாக தென்னிலங்கைக்குச் சென்றார் என்று வரலாறு உண்டு. போரில் இடிக்கப் பட்ட கோவிலின் செங்கற்களிலே தெய்வ உருவங்கள் பல செதுக்கப் பட்டிருந்தன.
தல அமைப்பு:
திருகோவிலில் முகப்பில் மணி மண்டபம் உள்ளது. மூலஸ்தானத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், பொலிவுடன் இருப்பதால் சித்திரவேலாயுத சுவாமி என்ற திருப்பெயருடன் ஆறுமுகங்களுடன் இந்திர மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூர்த்தி மிக விசேஷமானது. தமிழ்நாட்டிலுள்ள சிக்கல் சிங்காரவேலர், எட்டுக்குடி, எண்கண், போன்ற கோவில்களிலுள்ள முருகன் சிலையை ஒத்த அமைப்புடையது என்பது அதிசய உண்மை. மேலும் விநாயகப் பெருமானுடன் பிற உப தெய்வங்களும் வீற்றிருந்து அருளுகின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி சூரசம்ஹாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி
பிரார்த்தனை:
எண்ணிய எண்ணங்கள் நிறைவேற, நோய்கள் அகல, வினைகள் தீர
நேர்த்திக்கடன்:
காவடி, அன்னதானம், அபிஷேகம், அலங்காரம், பூஜைகள்
இலங்கை முல்லைத்தீவு குமாரபுரம் சித்திர வேலாயுத சுவாமியை சிந்தை குளிர வணங்கினால் தீராத நோய்களும் தீரும்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - எண்ணிய எண்ணங்கள் நிறைவேற்றும் இலங்கை முல்லைத்தீவு குமாரபுரம் சித்திர வேலாயுத சுவாமி
படம் 2 - தீராத நோய்களையும் தீர்க்கும் இலங்கை முல்லைத்தீவு குமாரபுரம் சித்திர வேலாயுத சுவாமி
Comments
Post a Comment