கோவில் 353 - இலங்கை மாதம்பை (சிறிய கதிர்காமம்) கலியுகவரத முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-353
நம்பி வரும் பக்தர்கள் நலன் காக்கும் இலங்கை மாதம்பை (சிறிய கதிர்காமம்) கலியுகவரத முருகன் கோவில்
27.5.22 வெள்ளி
அருள்மிகு மாதம்பை முருகன் (சிறிய கதிர்காமம்) திருக்கோவில்
மாதம்பை
புத்தளம்
இலங்கை
மூலவர்: மாதம்பை கலியுகவரத முருகன்
தல மகிமை:
இலங்கை புத்தளம் மாவட்டம் மாதம்பை பகுதியில் கொழும்பு-.புத்தளம் பிரதான சாலையில் அமைந்துள்ள மாதம்பை கலியுகவரத முருகன் திருக்கோவில், நவீன திராவிட பாணியில் மிகவும் வண்ணமயமான, நேர்த்தியான கோவிலாகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் இலங்கையின் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கோவிலை நினைவு படுத்துவதால், இந்த திருக்கோவில் சிறிய கதிர்காமம் கோவில் (புஞ்சி கதிர்காமம் கோவில்) என்றும் அழைக்கப்படுகிறது. தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் அதிக அளவில் வருவது இத்திருத்தலத்தின் சிறப்பம்சம்.
இலங்கையில் சுமார் 4000 இந்து கோவில்கள் இருப்பது மிக சிறப்பு. பலமுறை போரினால் இடிக்கப்பட்டும், அதி தீவிர சைவ பக்தர்களின் சீரிய அர்ப்பணிப்பால், அநேக கோவில்கள் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளன என்பது சிறப்பு செய்தி. நுழைவாயிலில் மலேசியா பத்துமலை முருகன் சிலை போலவே சிவக்குடும்ப சிலைகள் அதிஉயரமாக, வண்ணமயத்துடன் பயணிகளை ஈர்ப்பது சிறப்பம்சம். 2014-ம் ஆண்டு ஜனவரி 16-ல் ஐந்து தேர்களுடன் கூடிய ரதோஸ்வம் இந்த ஆலயத்தில் இடம்பெற்றது.
தலவரலாறு:
ஜனவரி 2012-ல் திறக்கப்பட்ட மாதம்பே கலியுகவரத முருகன் கோவில் வளாகம், உள்ளூர் வணிகர் ஒருவரால் நன்கொடையாக வழங்கப்பட்டது, இந்த பகுதி தென்னந்தோப்புகள் நிறைந்த அழகான பிரதேசம். .
தல அமைப்பு:
வடக்கு நோக்கிய கோவிலின் நுழைவாயிலில் மலேசியா நாட்டு பத்துமலை முருகன் சிலை போல், உயரமான 2 முருகன் சிலைகள் (முன் மற்றும் பின் கோபுரத்தில்) பொலிவுடன் பக்தர்களை வரவேற்கிறது. மேலும் அருகில் உயரமான சிவப்பெருமான். பார்வதி தேவி, விநாயகப்பெருமான் மற்றும் ஆஞ்சநேயர் சிலைகள் அருள்வது உலகில் எங்குமே காண முடியாத சிறப்பு. கோவிலின் உள் கதவில் ‘ஓம்’ என்னும் மந்திர சொல் கதவில் பதிக்கப்பட்டுள்ளது. கோவில் கோபுரங்கள், உள் மண்டபத்தில் மேற்கூறையில் தமிழகத்து கோவில்களைப் போலவே அனைத்து இந்து தெய்வங்களின் சித்திரங்கள் பல வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன.
கோவிலின் கருவறையில் கந்தப்பெருமான், கலியுகவரத முருகன் என்ற திருப்பெயருடன் காட்சியளித்து பகதர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும், விநாயகப்பெருமான், நவக்கிரகங்கள் முதலான தெய்வ்ங்களும் அருள்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், முருகனின் விசேஷ தினங்கள்
பிரார்த்தனை:
அனைத்து நலன்கள் வேண்டி, கேட்ட வரம் கிடைக்க
நேர்த்திக்கடன்:
அன்னதானம், அபிஷேகம், அலங்காரம், பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 6 முதல் இரவு 8 வரை
கேட்ட வரம் தந்தருளும் இலங்கை மாதம்பை கலியுகவரத முருகனை மனமுருகி கும்பிட்டு பலனடைவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
Comments
Post a Comment