கோவில் 351 - இலங்கை தொண்டைமனாறு செல்வ சந்நிதி முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-351
சித்தர்கள், முனிவர்கள், யோகிகள் தவம் செய்யும் இலங்கை தொண்டைமனாறு செல்வ சந்நிதி முருகன் கோவில்
25.5.22 புதன்
அருள்மிகு செல்வ சந்நிதி முருகன் திருக்கோவில்
தொண்டைமனாறு
வல்வெட்டிதுறை
யாழ்ப்பாணம் மாவட்டம்
இலங்கை
இருப்பிடம்:
மூலவர்: செல்வ சந்நிதி முருகன் & வேல்
தல விருட்சம்: பூவரச மரம்
பிற பெயர்கள்:ஆற்றங்கரையான், சின்னகதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை
தல மகிமை:
ஈழவள நாட்டின் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் விளங்குகின்றது. இலங்கை வடமாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டிதுறை தொண்டைமனாறு ஆற்றங்கரையில் செல்வ சந்நிதி முருகன் கோவில் உள்ளது. ஆற்றங்கரையான், சின்னகதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வருகிறது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய தெய்வாம்சங்களை ஒருங்கே அமைந்த திருத்தலமாக அமைந்துள்ளது. ஆகம விதிக்கு அகப்படாத அதற்கு அப்பாற்பட்ட அன்பு, பக்தி ஞானம் ஆகிய அபரிதமான மார்க்க வணக்க தனித்தலமாகக் கொண்டுள்ள இங்கு கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெறுகின்றது.
செல்வச் சந்நிதி முருகன் கோவில் ஆலயமணியின் கோபுரம் 54 அடி உயரமுள்ளது. இந்த ஆலயமணிதான் உலகிலுள்ள இந்து கோவில்களில் அதிக உயர கோபுரத்தில் அமைந்துள்ளதாக் கூறப்படுகின்றது. 1986 -ல் போரின் போது எறிகணை தாக்குதலால் கோபுரமும் மணியும் சேதமடைந்தன. வெளிநாடுகளில் உள்ள அன்பர்களின் விடா முயற்சியால் லண்டனில் மாமணி செய்யப்பட்டு 2002 -ம் ஆண்டு ஆவணி மாதம் சந்நிதியான் ஆலயத்தில் மீண்டும் பொருத்தப்பட்டது.
அன்னதானக்கந்தன் என்றழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு ஆவணி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் தீர்த்த உற்சவம் ஆண்டு தோறும் 15 நாட்கள் நடைபெறும். கோவில் கிணற்றுக்கு அருகே வள்ளிக்கொடி முளைக்கும் பொழுது திருவிழா ஆரம்பமாகி பதினைந்து நாட்கள் நடைபெறும். தேர்த்திருவிழாவின் போது முன்பாக காவடி, கரகாட்டம், பாற்காவடி, கற்பூரச்சட்டி, தூக்குக் காவடி என்றும், தேரின் பின்னால் அங்கப்பிரதட்சணை செய்யும் அதி தீவிர பக்தர்கள் ஏராளம்.
தலவரலாறு:
முன்னொரு காலத்தில் வீரபாகுத் தேவர், சூரபத்மனிடம் தூது சென்ற போது தனது காலடியைக் கல்லோடை என்ற இடத்தில் பதித்துச் சென்றதாகவும் பின்பு திரும்பும் வேளை சந்திக்கால பூஜை செய்யவேண்டியிருந்ததால் வல்லி ஆற்றங்கரையில் பூவரச மரநிழலில் வேல் ஒன்றை வைத்து சந்திக்கால பூஜை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் சித்தர்கள், முனிவர்கள், யோகிகள் தவம் செய்து முத்தியடைந்தார்களாம். செல்வச்சந்நிதி ஆலயத்தின் தல விருட்சமாக பூவரச மரம் அமைந்துள்ளது. முருகப்பெருமானும் கதிர்காமருக்கு முதலில் காட்சி கொடுத்தது பூவரச மரத்தின் கீழேயே என்று கூறப்படுகிறது.
தல அமைப்பு:
கோவிலின் தோற்றம், அமைப்பு, வழிபாட்டு முறை எல்லாம் சற்று வித்தியாசமானவை. ,கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இல்லை. ஆலய முற்றில் நந்தியும் சுற்றி வரவுள்ள அன்னதான மடங்களும், மருதமரக் காடுகளும், தொண்டமான் ஆறும் சந்நிதிக்கு மெருகூட்டுவதாக உள்ளன. ஆலயத்தின் எத்திசையிலிருந்து பார்த்தாலும் முருகனையும் அங்கு காட்டப்படும் தீபாராதனையையும் பார்க்க முடியும். இங்கு முருகனின் கையிலுள்ள வேலை வைத்து வழிபடும் முறை தொன்றுதொட்டு காலமாக வழக்கத்திலுள்ளது. இவ்வாலயத்தில் முருகப்பெருமான் வேல்வடிவத்திலே மூலமூர்த்தியாக காட்சி கொடுக்கின்றார். திருவிழாக் காலங்களிலும் வேல் உருவிலேயே எழுந்தருளி காட்சி கொடுக்கின்றார். இவ்வேலில் சிகண்டி முனிவர் தன்னைத்தாக்க வந்த யானைக்கு வெற்றிலையை கிள்ளி விசிய போது அது வேலாக மாறி யானையைத் தாக்கியதை எடுத்துக் காட்டுமுகமாக வெற்றிலையின் நுனி பதிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். கதிர்காமத்தைப் போல் வாய்கட்டி பூஜை செய்யும் முறையே இவ்வாலயத்திலும் காணப்படுகின்றது.
இக்கோவிலில் பூஜைகள் வேதாகம முறைப்படி நடப்பதில்லை. மந்திரங்கள் சொல்லப்படுவதில்லை. பூஜைகள் தனித்துவமான சைவ ஆசாரமுறையில் நடைபெறுகின்றன. முருகனுக்கு நிவேதனமாக 65 ஆலமர இலைகளில் பச்சை அரிசிப் பொங்கல் பயற்றங்கறியுடன் படைப்பார்கள். மருதர் கதிர்காமரின் பரம்பரையில் வந்த தொண்டர்களே. ஊற்சவத்தின் போது சுவாமியை மலர்மாலைகளால் அலங்காரம் செய்கின்றனர். இவர்கள் திருவிழாக்காலங்களில் விரதமிருந்து ஆசாரசீலராக சந்நிதியானுக்கு சகல தொண்டுகளும் செய்வார்கள். ஆலயத்தில் கொடுக்கப்படும் உணவுகளை தவிர வேறெந்த உணவுகளையும் உண்ணமாட்டார்கள். முருகனே பூக்காரராக இயங்குவதாக வரலாறு சொல்கிறது.
திருவிழா:
ஆவணிப் பூரம் பெருவிழா (15 நாள்) கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்,
பிரார்த்தனை:
அன்பு பெருக, பக்தி கூட, ஞானம் மேம்பட, நோய் தீர, எண்ணியது நிறைவேற
நேர்த்திக்கடன்:
பல வகை காவடிகள், கரகாட்டம், அன்னதானம், அபிஷேகம், அலங்காரம், பூஜைகள்
ஞானம் மேம்பட அருளும் இலங்கை தொண்டைமனாறு செல்வ சந்நிதி முருகனை தொழுது நலன் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - ஞானம் மேம்பட அருளும் இலங்கை தொண்டைமனாறு செல்வ சந்நிதி முருகன் வேல்
Comments
Post a Comment