கோவில் 350 - இலங்கை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-350 

350-வது முருகன் கோவிலாக சைவத்தை போற்றும் மகேஸ்வர பூஜை நடைபெறுகின்ற இலங்கை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்

24.5.22 செவ்வாய்

அருள்மிகு மாவிட்டபுரம் கந்தசுவாமி திருக்கோவில்

மாவிட்டபுரம் 

யாழ்ப்பாணம்

இலங்கை

இருப்பிடம்: யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் ஒன்பது மைல்கள் தொலைவில் 


மூலவர்: கந்தசுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: காஞ்சி மாமரம்

தலத்தீர்த்தம்: கீரிமலை கண்டகி தீர்த்தம்

வாகனம்: இந்திர மயில்

பழமை: 8-ம் நூற்றாண்டு


தல மகிமை:

இலங்கையில் உள்ள இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும், தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கருதப்படுகிறது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், இலங்கையின் வட மாகாணாம் பகுதியில் யாழ்பாணத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தினராலும் வணங்கபடும் திருத்தலம் என்ற சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு. 


இந்த ஆலயத்திற்கென பல சிறப்புகள் உண்டு. இந்த ஆலயத்தின் வரலாற்றில் முக்கிய சிறப்பாக மாருதபுரவல்லி என்ற அரசியின் குதிரை முகம் நீங்கிய வரலாறு கோவிலின் சிறப்பு. மாருதபுரவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசி இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருளால் குதிரை முகம் நீங்கி, மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா+விட்ட+புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என கூறுகின்றனர். மா என்றால் குதிரை என்ற அர்த்தமும் உண்டு


ஜூலை/ஆகஸ்ட் வருடாந்திர திருவிழா (ஆடி அமாவாசை) சமயங்களில் கொடியேற்றத்திற்கு பதிலாக காம்போற்சவ திருவிழாக்கள் 25 நாட்கள் இடம்பெறுகின்றன. சிறப்பம்சமாக திருவிழாக்கள் போது காலை 8.00 - மாலை 4.00 மணி வரை சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், ஷண்முகார்ச்சனை, ஆராதனைகள், திருமுறை ஓதுதல், மகேஸ்வர பூஜை [சிவனடியார்களை பூஜித்து அன்னம் பாலிப்பது], அருணகிரி நாதரின் திருப்புகழ் என சைவ சமயத்தை போற்றும் பல்வேறு நிகழ்சிகள் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. புராணபடனம் ஆண்டு தோறும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. கந்தசஷ்;டி திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நித்திய பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சுக்கிர வார உற்சவம், மாத உற்சவம் ஆகியனவும் உண்டு.. 


தலவரலாறு:

தமிழகத்தில் மதுரை நகரை ஆட்சி புரிந்த மன்னர், உக்கிரப்பெருழகி. இந்த மன்னனின் மகள் மாருதப்புரவல்லி குதிரை முகத்துடன் காணப்பட்டதுடன் குண்ம நோயினாலும் வருந்தினாள். எல்லா வகையான வைத்தியர்களும் வைத்தியம் செய்தும் இவளுடைய நோய் தீரவில்லை. சாந்தலிங்க முனிவருடைய வழிக்காட்டலின் கீழ் அரசி தென்னிந்தியாவில் இருந்து இலங்கை கீரிமலை வந்து நீராடி கந்தசுவாமி ஆலயத்தையும் வழிப்பட்டு வந்தார். இந்நிலையில் இவருடைய நோய் நீக்கியதுடன், குதிரை முகமும் நீங்கி மகா பேரழகு பெற்று காணப்பட்டாள். எனவே மதுரையிலிருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிறந்த சிற்பிகளையும், பொருட்களையும் கொண்டு வந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தனர். விக்கிரகங்கள் உரிய முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கி.பி. 789-ல், ஆனி உத்திர நட்சத்திரத்தில் குடமுழுக்கு சிறப்புற நடைபெற்றது. 


மீண்டும் 1795-ல் மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது. பின்னர் போர்ச்சுகீசியர்கள் இலங்கை மீது படையெடுத்து இலங்கையை கைப்பற்றிய வேளையில் மத மாற்றும் முகமாக இந்து ஆலயங்களை அழித்து தேவாலயங்களை நிர்மாணித்தார்கள். அப்போது மாவிட்டப்புரம் கந்தசுவாமி கோயிலும் அழிக்கப்பட்டது. அவ்வேளையில் ஆலயத்தில் இருந்த கந்தசுவாமி திருவுருவத்தை மக்கள் கோவில் கிணற்றில் மறைத்து வைத்தார்கள். போர்ச்சுகீசியர்கள் ஆட்சி முடிந்து ஒல்லாந்தர் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் கந்தசுவாமியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிப்பாடு நடைபெற துவங்கியது. இடைப்பட்ட காலத்தில் மூலஸ்தானத்தில் வேல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பின் ஈழப்போரின் போது இத்திருக்க்கோவில் மீண்டும சிதைக்கப்பட்டது. முருகப்பெருமான் கருனையால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.  இன்றும் கூட கந்தசுவாமியின் மூலஸ்தானத்தில் வேலும் வைக்கப்பட்டு வழிபடுவதை காணலாம். 2011-ல் இலங்கை அரசால் புராதாண சின்னமாக அறிவிக்கப்பட்டது.  


தல அமைப்பு:

ஆலயத்தின் மேற்கு கோபுர வாசலில் புராதன ராஐகோபுரம் வானளாவி நிற்கின்றது. 108 அடி உயர அழகிய கோபுரத்தைக் கொண்ட இத்திருக்கோவில் கருவறையில் மூலவரான கந்தசுவாமியுடன் மூலஸ்தானத்தில் வேலும் வைக்கப்பட்டு வழிபடுவதையும் இன்றும் காணலாம். தேவியரும் இருப்பது கூடுதல் ஆற்றல். வேலும், செவ்வேளும் தரிசிக்க வருகை தரும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் அளித்து அருள்பாலிப்பது சிறப்பம்சம். கந்தபுராணத்தில் கூறப்படும் “இந்திர மயில்” இங்கு வாகனமாக உள்ளது. கொடிமரம் வெள்ளியினாலானது. மேலும் உபதெய்வங்களும் வீற்றிருந்து அருள்வது சிறப்பு. சில நாட்களுக்கு முன்னர் (மே 4-ல்) கிழக்கு கோபுர மீளமைப்பு (புனரமைப்பு) திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது நற்செய்தி. 


திருவிழா:

ஆடி அமாவாசை பெருவிழா (25 நாள்) கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்,  பிரதி வெள்ளி, சஷ்டி, கார்த்திகை 


பிரார்த்தனை:

மனதில் நினைத்தது நிறைவேற்ற, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 5-12 மாலை 5-8


நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கின்ற இலங்கை மாவிட்டபுரம் கந்தசுவாமியை இல்லத்திலிருந்தே வணங்கி பலனடைவோம்!                                                                                                                                                                                  

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கின்ற இலங்கை மாவிட்டபுரம் கந்தசுவாமி



படம் 2 - மனதில் நினைத்ததை நிறைவேற்றும் இலங்கை மாவிட்டபுரம் கந்தசுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்