கோவில் 348 - இலங்கை கபிலவனம் கந்தன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-348
நவகோடி சித்தர்கள் தவமிருக்கும் ஈராயிரம் ஆண்டுகள் பழமையான இலங்கை கபிலவனம் கந்தன் கோவில்
22.5.22 ஞாயிறு
அருள்மிகு கபிலவனம் கந்தன் திருக்கோவில்
கபிலவனம் (கபிலவித்தை/ கபிலித்தை)
மொனராகல மாவட்டம்
இலங்கை
மூலவர்: கந்தன்
பழமை: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
தல மகிமை:
இலங்கையின் மொனராகல மாவட்டத்திலுள்ள யால சரணாலயத்தின் மத்தியில் கபிலவனம் (கபிலவித்தை) என்ற இடத்தில் மிகவும் பழைமையான சக்தி வாய்ந்த அதிசயமான ஒரு முருகன் ஆலயம் உள்ளது. இக்கோவில் கட்டடங்கள் இல்லாத, பூசாரி இல்லாத சக்தி வாய்ந்த திறந்தவெளி கோவிலாகும். 12 சிற்றாறுகளைக் கடந்து, 32 கி.மீ டிராக்டரில் பயணம் செய்தால்தான் இவ்வனத்தை அடைய முடியும்.
ஆதியில் கதிர்காமத்தில் போகர் பூஜை செய்து காணாமல் போன நவாக்சரி யந்திரம் நவபாஷாண வேல் இங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தை இன்றும் ஆதி கதிர்காமம் என்றே பழைய சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன. இன்றும் இங்கு நவகோடி சித்தர்கள் தவமிருப்பதாக சொல்லப்படுகிறது. யானைகள் ரூபத்தில் தேவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் வந்து இங்கு முருகனை வழிபடுவதை காணலாம்.
இலங்கையில் பழைய காலத்தில் மன்னர்கள் இங்கு வந்து வழிபட்ட பின்னர்தான் தங்கள் அரச பதவிகளை ஏற்பது வழக்கமென்று நம்பப்படுகிறது.
இந்த புனித யாத்திரைக்கு, குறைந்தபட்சம் 21 நாள்களுக்கு முன்பு மது, மாமிசம் தவிர்த்து பிரம்மச்சரியம் மேற்கொண்டு கடுமையான விரதம் மேற்கொள்ள வேண்டும். தற்போது வரை சிலரால் மட்டுமே செல்லக்கூடிய அபூர்வ வனத்திற்கு, முருகன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் எனக் கூறப்படுவதுண்டு. முருகப்பெருமானை நினைந்து விரதமிருந்து, இத்தலம் சென்று வந்தால் அடுத்த வருடத்துக்குள் நினைத்த காரியம் நடைபெறுமென்பது ஐதீகம்.
கபிலவனத்தின் ஆன்மிக சக்திகளின் காரணமாக, இந்த நடைமுறைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள், வீடு திரும்பும் வழியில் பல தடைகளை எதிர்கொள்வார்கள் என்பது நம்பிக்கை. இங்கு உள்ள காவல் தெய்வமான கடவற கலுபண்டா அப்பச்சி யானை வடிவில் வந்து விரதத்தை ஒழுங்காக மேற்கொள்ளாதவர்களை புனித புளியமரத்தை தரிசனம் செய்ய முடியாமல் விரட்டி அடிப்பது பல முறை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தலவரலாறு:
இலங்கையில் முருக வழிபாடு என்பது தொன்மையான காலத்தில் இருந்தே இருந்து வருகின்றது என்கிறது அந்நாட்டின் வரலாறு. இலங்கையின் அனுராதபுரா, பின்விவா, கந்தரோட்டை மற்றும் புனக்காரி பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்த பொருள்கள் சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் முருக வழிபாடு உண்டு என்பதை நிரூபிக்கின்றன. அதற்கு சான்றாக ஒரு ஆலயமும் உள்ளது. அதுவே கபில வனம் கந்தன் கோவிலாகும்.
கபிலித்தை என்றும் அழைக்கப்படும் இந்த இடம் முருகப்பெருமான் வாழும் இடம் என்கிறார்கள். பண்டைய காலத்திலேயே முருகனுக்காக உருவான திறந்தவெளி மரக்கோயில் இது என்றும் கூறுகிறார்கள். இங்குதான் முருகப்பெருமான், ஆதியில் தவமிருந்து சக்திகளை பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் முருகன் கதிர்காமத்தில் சூரசம்ஹாரத்தை முடித்த பின்னர் தனது தங்க வேலை எறிந்ததாகவும், அந்த வேல் ஓர் புளியமரத்தில் வீழ்ந்ததாகவும், அப்புளியமரத்தின் கீழ் வேடுவர்கள் முருகனின் வேலை வைத்து வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
கபிலவனம் முருகனின் குடியிருப்பு என்று கூறப்படுகிறது. பண்டைய செவிவழி கதையின்படி, ஒரு மழை நாளில் முருகன் தனது வருங்கால மனைவி வள்ளியை இந்த இடத்தில் ஒரு புளிய மரத்தின் (சிங்கள மொழியில் 'சியாம்பலா' மரம்) அருகே சந்தித்தார், அதில் இருந்து 'சியம்பலவா தேவலாயா' என்று பெயர் வந்தது என்கிறார்கள். மேலும் இங்கு முருகப்பெருமான் தனது ஒளி தேகத்தோடு கபில முனிவருக்கு காட்சி கொடுத்ததால் இந்த வனத்திற்கு கபிலவனம் என்ற பெயர் வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தல அமைப்பு:
இங்கு முருகப்பெருமான் ஒளி தேகத்தோடு நவகோடி சித்தர்களோடு நிஷ்டையில் அருள் புரிகிறார் என்றும், போகர் கதிர்காமத்தில் வணங்கிய நவபாசான நவாக்க்ஷரி யந்திரம் மற்றும் முருகப்பெருமானின் வேல், ஆபரணங்கள் இங்கு புனித புளியமரத்தின் அடியில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் ஐதீகம் உள்ளது. பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வந்து, வணங்கி பலன் பெற்று செல்கிறார்கள். தற்போது சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
பிரார்த்தனை:
நினைத்தது நிறைவேற
நினைத்த காரியத்தை நிறைவேற்றும் கபிலவனம் கந்தனை மனக்கண்ணால் தரிசித்து மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - நவகோடி சித்தர்கள் தவமிருக்கும் இலங்கை கபிலவனம் கந்தன் கோவில்
படம் 2 - நினைத்த காரியத்தை நிறைவேற்றும் கபிலவனம் கந்தன்
Comments
Post a Comment