கோவில் 345 - வியட்நாம் ஹோ சி மின் நகர் (சைகோன்) தண்டாயுதபாணி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-345
இகபர சௌபாக்கியமருளும் வியட்நாம் ஹோ சி மின் நகர் (சைகோன்) தண்டாயுதபாணி கோவில்
19.5.22 வியாழன்
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்
66 டன் தட் தீப் (66 Ton That Thiep)
ஹோ சி மின் நகர் 7000 (Ho Chi Minh City 7000),
வியட்நாம் (Vietnam)
மூலவர்: தண்டாயுதபாணி
உற்சவர்: முருகப்பெருமான்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
வியட்நாம் நாட்டின் முக்கிய நகரமான சைகோன் (Saigon) என்று முன்னர் அழைக்கப்பட்ட, ஹோ சி மின் நகரில் உள்ள 66 டன் தட் தீப்-ல் தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், குறிப்பாக காரைக்குடி பகுதியில் இருந்து வணிகம் செய்ய வந்த நகரத்தார் சமூகத்தால் கட்டிய 3 திருக்கோவில்களில் முக்கியமான ஒன்று தண்டாயுதபாணி திருக்கோவில் என்பது சிறப்பு. ஹோ சி மின் நகரம், வியட்நாமின் மிகப்பெரிய நகரமாகும். தெற்கு வியட்நாமில் அமைந்துள்ள இந்த நகரத்தை சுற்றி சைகோன் நதி ஓடுவது சிறப்பு.
இந்தக் கோவில் வியட்நாமில் உள்ள மிகவும் எளிமையான இந்து கோவில். இது உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரபலமான கோவிலாகும். அனைத்து தெய்வங்களும் இக்கோவிலில் இருப்பது சிறப்பம்சம். கோவிலின் மீது ஏறி நின்றால், முழு நகரத்தையும் பார்க்கலாம். வியட்நாம் செல்லும் வெளி நாட்டு தமிழர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர் என்பது சிறப்பு.. வியட்நாமிய மக்களும் பிரார்த்தனை செய்ய வருகின்றனர்.
இத்திருக்கோவிலுக்கு அருகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் என்ற திருத்தலங்கள் உள்ளன. இந்த நகரில் தமிழர்களால் எழுப்பப்பட்ட 3 இந்துக் கோவில்கள் அருகருகே இருப்பது சிறப்பு.
தலவரலாறு:
சைகோன் நகரம் (தற்போதைய ஹோ சி மின் நகர்) இந்திய புலம்பெயர்ந்தோரின் தாயகமாக 1800-களில் இருந்தது. குறிப்பாக சிவகங்கை பகுதியிலிருந்து குடிபெயர்ந்த நகரத்தார் சமூகத்தினர் (நாட்டுக்கோட்டை செட்டியார்) அதிகமாக இருந்தனர். இவர்கள் முருகபெருமானின் தீவிர பக்தர்களாவர். எனவே தற்போதைய ஹோ சி மின் நகர் பகுதியில் தமிழ் கடவுள் முருகனுக்காக இரண்டு, கோவில்களையும், மாரியம்மனுக்காக ஒரு கோவிலையும் எழுப்பினர்.
தண்டாயுதபாணி திருக்கோவில் 1900-களில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 1936-ல் தற்போதைய கோபுரம் எழுப்பப்பட்டது. தண்டாயுதபாணி கோவில் வியட்நாம் நாட்டில் உள்ள ஆரம்ப கால தமிழ் சமூகத்தின் காலடித் தடத்தின் சின்னமாக உள்ளது என்பது சிறப்பு. தற்போது கோவில் திரு முத்தையா பராமரிப்பாளாராக இருக்கின்றார். அவரது தந்தை பெயர் பழனிவேலு செட்டியார். தாயார் வியட்நாமியர். தாத்தா சுப்பையா செட்டியார், பாட்டி உமையாள் ஆச்சி. அனைவரது பெயர்களும் முருகனின் நாமங்களிலேயே உள்ளது சிறப்பு.
தல அமைப்பு:
தமிழக கோவில்களைப் போல, அழகிய கோபுரத்தைக் கொண்டுள்ள இக்கோவிலின் கருவறையில் தண்டாயுதபாணி என்ற திருநாமத்துடன் முருகப்பெருமான் திருக்காட்சி அளித்து அருள்பாலிக்கின்றார். தண்டாயுதபாணி தெய்வத்தின் முன் கல் மயில் உள்ளது. ஆறுமுகங்களுடன் ஷண்முகர் காட்சியருளுகின்றார். சிறப்பம்சமாக முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும வெள்ளித் தேர் கண் கொள்ளா அழகு. இடும்பன் தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.
கருவறைக்கு இடப்புறம் சிவப்பெருமான் மற்றும் வலபுறம் ஜெகந்நாதர் (கிருஷ்ணர் வீற்றிருக்கின்றனர். மேலும் பார்வதி, விநாயகர், துர்க்கை, ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், பிரம்மா, சரஸ்வதி, நவக்கிரகங்கள் முதலான உப தெய்வங்கள் உடனிருந்து அருளுகின்றனர். சைவக் குரவர் நால்வரும் தனி சந்நிதியில் உள்ளனர். கோவில் கோபுரத்தில் வடிவமைக்கப்பட்ட அழகிய சிற்பங்களில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், சிவப்பெருமான், லட்சுமி சமேத மகா விஷ்ணு மற்றும் பிற தெய்வங்களும் பல வண்ணங்களில் காண்பது சிறப்பம்சம்.
திருவிழா:
முருகனுக்குரிய விசேஷ நாட்கள்
பிரார்த்தனை:
இகபர சௌபாக்கியம் வேண்டி, சகல செலவங்கள் பெற, நோய்கள் தீர
நேர்த்திக்கடன்:
சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 5 முதல் இரவு 8 வரை
வியட்நாம் ஹோ சி மின் நகர் (சைகோன்) தண்டாயுதபாணி சுவாமியை மனமுருகி வேண்டிக் கொண்டால் சகல செல்வங்களையும் பக்தர்களுக்கு தந்தருளுவார்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - இகபர சௌபாக்கியமருளும் வியட்நாம் ஹோ சி மின் நகர் (சைகோன்) தண்டாயுதபாணி
படம் 2 - சகல செல்வங்களையும் அருளும் வியட்நாம் ஹோ சி மின் நகர் (சைகோன்) தண்டாயுதபாணி கோவில்
Comments
Post a Comment