கோவில் 343 - தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் மெல்ரோஸ் சிவ சுப்ரமணியர் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-343
ஆன்மீக உணர்வை அதிகரிக்கும் தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் மெல்ரோஸ் சிவ சுப்ரமணியர் கோவில்
17.5.22 செவ்வாய்
அருள்மிகு மெல்ரோஸ் சிவ சுப்ரமணியர் திருக்கோவில்
2nd ரோடு, அப்பாட்ஸ்ஃபோர்டு (II Road, Abbotsford),
மெல்ரோஸ் (Melrose)
ஜோகன்னஸ்பர்க் 2192 (Johannesburg 2192)
தென்னாப்பிரிக்கா (South Africa)
மூலவர்: சிவ சுப்ரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
பழமை: 152 வருடங்கள் (கிபி 1870)
தல மகிமை:
தென்னாப்பிரிக்கா தலைநகரம் ஜோகன்னஸ்பர்க் மெல்ரோஸ் பகுதியில் தமிழ்க் கடவுள் முருகனின் மிகவும் பிரசித்தி பெற்ற மெல்ரோஸ் சிவ சுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. 1870-ல் இந்தியாவில் இருந்து குடி பெயர்ந்த தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலுக்கு இந்த ஆண்டு 152வது ஆண்டாகும். தென்னாப்பிரிக்காவில் மிகவும் பழமையான இக்கோவில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த்து என்பது சிறப்பம்சம்.
இந்த திருக்கோவிலில் சித்திரை மாத காவடி திருவிழா மிகவும் சிறப்பு திருவிழாவாகும். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் இவ்விழா கோலாகாலாமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக கோவில்கள் போலவே தினசரி அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. தைப்பூசத் திருவிழாவும் வெகு விமரிசையாக நடக்கின்றது. இரண்டு திருவிழாக்களிலும் பக்தர்கள் பயபக்தியுடன் பல்வேறு வகையான காவடிகள், பால்குடம் சுமந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது சிறப்பம்சம். திருக்கார்த்திகை தீபத்திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்.
இக்கோவில் நிர்வாகக் குழு குழந்தைகளுக்கு தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடுகள், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், கீதை, இசை, பரதநாட்டியம் முதலியவகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இக்கோவிலுக்கு 20,000 பக்தர்களை கொண்டுள்ளது சிறப்பம்சம். உலகெங்குமிருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
தலவரலாறு:
ஜோகன்னஸ்பர்க் மெல்ரோஸ் சிவ சுப்பிரமணியர் ஆலயம் 1870-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கின் வடக்கே உள்ள மெல்ரோஸ் சலவைத் துறை மற்றும் கரும்பு தோட்டங்களில் பணிபுரியும் தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்களால் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் மிக சிறியதாக தொடங்கிய ஆலயம், 1996-ம் ஆண்டிலும், பின்னர் 2011-ம் ஆண்டிலும் விரிவாகப் புதுப்பிக்கப்பட்டு, இன்று தென்னாப்பிரிக்கவிலேயே மிக பிரபலமான இந்துக் கோவிலாக திகழ்கின்றது..
தல அமைப்பு:
இத்திருக்கோவில் கருவறையில், சிவ சுப்ரமணியர் என்ற திருப்பெயருடன் தனது தேவியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும், சிவப்பெருமான், அன்னை மீனாட்சி, விநாயகர், பெருமாள், லட்சுமி, பெரிய திருவடி (கருடாழ்வர்), ஆஞ்சநேயர் (சிறிய திருவடி) மற்றும் நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்கின்றனர். உற்சவ மூர்த்திகளும் பொலிவுடன் குடியமர்ந்து அருளுவது சிறப்பு.
திருவிழா:
சித்திரை திருவிழா, தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகைத் தீபம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பிரதி செவ்வாய், வெள்ளி, சஷ்டி
பிரார்த்தனை:
ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்க, கல்வி, ஞானம், ஐஸ்வர்யம் பெருக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6 முதல் மாலை 6 வரை
தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் மெல்ரோஸ் சிவ சுப்ரமணியரை சிந்தை மகிழ தொழுதால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - ஆன்மீக உணர்வை அதிகரிக்கும் தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் மெல்ரோஸ் சிவ சுப்ரமணியர்
படம் 2 - சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் மெல்ரோஸ் சிவ சுப்ரமணியர் கோவில்
Comments
Post a Comment