கோவில் 322 - ஆஸ்திரேலியா மெல்போர்ன் முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-322
செவ்வாய் அதிபதி செவ்வேளின் ஆஸ்திரேலியா மெல்போர்ன் முருகன் கோவில்
26.4.22 செவ்வாய்
அருள்மிகு மெல்போர்ன் முருகன் திருக்கோவில்
சன்ஷைன் நார்த் (Sunshine North)
மெல்போர்ன் (Melbourne)
விக்டோரியா – VIC 3020
ஆஸ்திரேலியா
மூலவர்: மெல்போர்ன் முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணம் மெல்போர்ன் நகரில் சன்ஷைன் நார்த் பகுதியில் அமைந்துள்ள மெல்போர்ன் முருகன் கோவில்; பிரபலமான இந்து கோவிலாகும். 1995-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக முருக பக்தர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் பிரதானமாக தெய்வங்களாக வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர் சிலைகள் உள்ளன.
கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை முதலான தினங்களில் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடைபெற்று, சுவாமி வீதி உலா வருவது அழகு. தேரோட்டம் இக்கோவிலின் சிறப்பம்சம்,
தலவரலாறு:
விக்டோரியா மாநிலத்தில் முருகன் வழிபாடு இலங்கை யாழ்ப்பாண தமிழரான திருமதி மணி செல்வேந்திரன் ஐந்து உலோகங்களால் செய்யப்பட்ட வேல் ஒன்றைக் கொண்டு வந்து வழிபாடு செய்து வந்தார். 1991-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு மெல்போர்னில் உள்ள சமுதாய கூடங்கள் மற்றும் வீடுகளில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. மணி செல்வேந்திரனின் கூற்றுப்படி, முருகனின் பக்தரான தனது தந்தை திரு. வி. தம்பிநாயகத்தின் அபிலாஷையை நிறைவேற்றுவதற்காக மெல்போர்னில் முருகப்பெருமானுக்குக் கோவில் கட்டத் தொடங்கினார். மெல்போர்ன் முருகனுக்குக் கோவில் கட்டுவதற்காக 1995-ல் மெல்போர்ன் கலாச்சார மையம் உருவாக்கப்பட்டது. திரு.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் கலாசார மையம் விக்டோரியா மாகாணத்தில் மெல்போர்ன் முருகன் கோவிலின் முதற்கட்டப் பணியை 1999-ல் நிறைவு செய்தது. இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம் 23.1.1999 அன்று நடைபெற்றது. எனவே இந்த முருகப்பெருமான் மெல்போர்ன் முருகன் என்றழைக்கப்பட்டார். 29.1.2007-ல் மீண்டும் 2-வது கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல அமைப்பு:
திருக்கோவில் வாசல் மாடத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தெய்வங்களுக்கு பின்புறம் மயில் உள்ளது. முதன் முதலில் வேல் இங்குதான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததாம். இத்திருக்கோவில் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். வேல் வழிபாடும் சிறப்பாக நடைபெறுகிறது. முருகன், உற்சவர் ஷண்முகர் இருவருக்கும் வசந்த மண்டபங்கள் உண்டு.
வெளிப்பிரகாரத்தில் விநாயகப்பெருமான் மற்றும் பார்வதி தேவி சமேத சிவப்பெருமான் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருளுகின்றனர். மேலும் ஆஞ்சநேயர், விஷ்ணூ, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களும் அருளுவது சிறப்பு.
திருவிழா:,
கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, பிரதி சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
கல்வி, ஞானம் மேம்பட, தீவினை அகல, ஐஸ்வர்யங்கள் வேண்டி, மன அமைதி வேண்டி
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 7.30-11.30 மாலை 5.30-8.30 (சனி ஞாயிறு மட்டும் காலை 12.30 வரை)
சகல ஐஸ்வர்யங்களை வழங்கிடும் மெல்போர்ன் முருகனை போற்றி புகழ்ந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - சகல ஐஸ்வர்யங்களை வழங்கிடும் மெல்போர்ன் முருகப்பெருமான்
படம் 2 - தீவினைகளை அகற்றும் மெல்போர்ன் முருகன் கோவில் சூரசம்ஹாரம்
Comments
Post a Comment