கோவில் 321 - ஆஸ்திரேலியா சிட்னி முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-321
வைகாசிக் குன்று என்றழைக்கப்படும் ஆஸ்திரேலியா சிட்னி முருகன் கோவில்
25.4.22 திங்கள்
அருள்மிகு சிட்னி முருகன் திருக்கோவில்
மேஸ் ஹில்ஸ் (May Hills)
சிட்னி
நியூ சவுத் வேல்ஸ் – NSW 2145
ஆஸ்திரேலியா
மூலவர்: சிட்னி முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில தலைநகரமான சிட்னியிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்துள்ள சிட்னி முருகன் திருக்கோவில் சிறப்பு மிக்க கோவிலாகும். தமிழக முருகன் கோவில்கள் போலவே சிட்னி முருகனும் ‘மேஸ் ஹில்ஸ்’ என்ற குன்றில்தான் குடிக்கொண்டுள்ளார். இந்த இடத்தை வைகாசிக் குன்று என்று அழைக்கின்றனர்.
சிட்னி முருகன் கோவி்லின் வருடாந்திர மஹோற்சவ விழா ஒவ்வொரு பங்குனி உத்திர சமயத்தில் கொடியேற்றத்துடன் 11 நாள் விமரிசையாக நடைபெறுகிறது. கந்த சஷ்டி விரதம் அனுசரிக்கபடுகிறது. முருகனுக்குரிய அனைத்து விசேஷங்களும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வார செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் கோவில் சைவ மன்ற தமிழ் பக்தர்கள் கூட்டு வழிபாடு நடத்துவது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். சைவ மன்றம் சார்பில் சைவ சமய தத்துவங்கள், கந்த சஷ்டி கவசம், சைவ மதத்தின் மீது ஒரு பார்வை, சிட்னி முருகன் பஞ்ச புரான தோப்பு முதலான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தலவரலாறு:
சிட்னியில் முதன் முதலாக ‘சிவஜோதி தணிகை ஸ்கந்தகுமார்’ என்ற இலங்கை நாட்டு முருக பக்தரால் முருக வழிபாடு துவங்கியது. அவர் பஞ்சலோகத்திலான சிலையை 1983-ம் ஆண்டில் எடுத்து வந்து தன் வீட்டில் வைத்து பூஜை செய்யத் துவங்கினார். 1986-ம் ஆண்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அந்த சிலையை எடுத்துச் சென்று ‘ஸ்டிராத்பீல்ட்’ (Strathfield Girls High School) பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இருந்த அறை ஒன்றில் வைத்து, முருகப்பெருமானுக்கு பூஜை செய்து வழிபட ஏற்பாடு செய்தார். 1990-ம் ஆண்டில் பள்ளியில் இருந்து சுமார் பத்து கிமீ தொலைவில் இருந்த ‘மேஸ் மலை’ (Mays Hill) என்ற இடத்தை வாங்கி சைவ மன்றம் என்ற அமைப்பை சார்ந்தவர்கள் (இலங்கைத் தமிழர்கள், தென்னிந்திய தமிழர்கள்) பக்தர்களின் பொருளுதவியுடன் ஆலயத்தைக் கட்டினார்கள். 1999-ம் ஆண்டு ஜுன் 17-ல் ‘சிட்னி’ முருகப் பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தேறியது.
தல அமைப்பு:
சிட்னி முருகன் ஆலயம் ஐந்து கருவறைகளைக் கொண்டது. வலது பக்கம் சித்தி விநாயகரும் இடது பக்கத்தில் வள்ளி தெய்வானை சமேதரராக முருகனும் இடையில் உள்ள மூன்று கருவறைகளில் வலப்பக்கத்தில் சிதம்பேஸ்வரரும் இடப்பக்கத்தில் சிவகாமசுந்தரியும் நடுவண் கருவறையில் முருகனும் எழுந்தருளியுள்ளனர். சோமாஸ் கந்தரான இந்த முருகப்பெருமான், சிட்னி முருகன் என்ற திருப்பெயருடன் காட்சி தந்து ஆஸ்திரேலிய வாழ் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஆறுமுக சுவாமி வள்ளி தெய்வானையுடன் உற்சவராக காட்சி தந்து அருள்கின்றார்.
மேலும் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள்கின்றனர். அலங்காரத் தூண்களில் ஆறு படைவீடுகள், மற்றும் கதிர்காமம், செல்வச்சந்நிதி, வெருகலம்பதி, நல்லூர் ஆகிய திருத்தலங்களில் கோவில் கொண்டுள்ள முருகனின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. வசந்த மண்டபமும் உண்டு.
திருவிழா:
பங்குனி உத்திரம் (11 நாள்), வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி சித்ரா பவுர்ணமி, ஆடி செவ்வாய், விநாயகர் சதுர்த்தி, பிரதி செvவாய், வெள்ளி, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
நினைத்தது நிறைவேற, பயம், பிணி நீங்கிட, வாழ்வு சிறக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 7 முதல் இரவு 9 வரை
நினைத்ததை நிறைவேற்றி அருளுகின்ற சிட்னி முருகன் சிரம் பணிந்து வணங்கி பயன் பெறுவோம் !
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - வாழ்வு சிறக்க வரமருளும் ஆஸ்திரேலியா சிட்னி முருகன்
படம் 2 - நினைத்ததை நிறைவேற்றி அருளுகின்ற சிட்னி முருகன் கோவில்
Comments
Post a Comment