கோவில் 318 - விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-318
கேட்கும் வரங்களை தந்தருளும் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவில்
22.4.22 வெள்ளி
அருள்மிகு சித்தகிரி முருகன் திருக்கோவில்
அவலூர்பேட்டை-604201
மேல்மலையனுர் தாலுகா
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: விழுப்புரம் 70 கிமீ, மேல்மலையனூர் 10 கிமீ, திருவண்ணாமலை 28 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் தாலுகா அவலூர்பேட்டையில் சித்தகிரி குன்றின் மீது முருகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
சிறப்பு மிக்க இத்திருக்கோவிலில் வற்றாத திருக்குளம் உள்ளது. பக்தர்கள் இக்குளத்தில் நீராடி முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால், கேட்கும் வரங்களை அள்ளி வழங்கிடுவார் நம் கந்தப்பெருமான்.
இத்திருத்தலத்தில் முக்கிய திருவிழா பங்குனி உத்திர திருவிழாவாகும். 99 ஆண்டுகளாக நடைபெறும் இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் சிறப்பு மிக்க ஆன்மீக சொற்பொழிவு, இசை கச்சேரி, பட்டிமன்றம், நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். முருகப்பெருமானை தரிசிப்பதற்காகவும், பால்குடம், அனைத்து வகை காவடிகள் ஏந்தி (பால், பன்னீர், புஷ்ப, தூக்கு காவடி) நேர்த்திக்கடனை செலுத்துவதற்காகவும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாள் இரவு ராமலிங்க சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து சக்திவேல் புறப்பாடும், பங்குனி உத்திரமன்று புஷ்ப ரத ஊர்வலமும், மறுநாள் இரவு முத்துப் பல்லக்கில் சாமி வீதி உலாவும், அதற்கடுத்த நாள் இரவு தெப்ப உற்சவமும், அதற்கடுத்த மறுநாள் இடும்பன் பூஜையுடன் பங்குனி உத்திர பெருவிழா முடிவடைகிறது. பங்குனி தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். மேலும் தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை தீபத்திருநாள் விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தலவரலாறு:
100 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோவிலில் சித்தர்கள் தவம் செய்வதாக ஐதீகம். இன்றும் சித்தர்கள் தவம் செய்வதாக பக்தர்கள் கூறுவது தலத்தின் சிறப்பாகும்.
தல அமைப்பு:
200 படிகள் கொண்ட சித்தகிரி மலையின் மீது ஏறினால், கோவில் வாசலை அடையலாம். திருக்கோவில் கருவறையில் மூலவராக சித்தகிரி முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர். மேலும், விநாயகர், மகேஸ்வரன், மகேஸ்வரி, பாலாம்பிகை, இடும்பன் முதலான் தெய்வங்கள் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருளுகின்றனர்.
திருவிழா
பங்குனி உத்திரம் தைப்பூசம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை, பிரதி சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கேட்கும் வரங்கள் கிடைத்திட, திருமணம் பாக்கியம் வேண்டி, குழந்தைப்பேறு வேண்டி, தம்பதி ஒற்றுமை ஓங்கிட, கல்வி, ஞானம் மேம்பட, தீவினைகள் நீங்கிட,
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள், அன்னதானம்
தீவினைகள் அகன்றிட அவலூர்பேட்டை சித்தகிரி முருகனை மனமுருக வேண்டி பயன் பெற்றிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன்
Comments
Post a Comment