கோவில் 317 - வேலூர் மாவட்டம் மேல்மாயில் மயிலாடும் மலை சக்திவேல் முருகன் கோவில்

 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-317

2022 சஷ்டி நன்நாளில் மிளகாய் சித்தர் கட்டிய வேலூர் மாவட்டம் மேல்மாயில் மயிலாடும் மலை சக்திவேல் முருகன் கோவில் 

21.4.22 வியாழன்

அருள்மிகு சக்திவேல் முருகன் திருக்கோவில்

மயிலாடும் மலை

மேல்மாயில்-632203 

கே.வி.குப்பம் தாலூகா

வேலூர் மாவட்டம் 

இருப்பிடம்: வேலூர் 26 கிமீ, கே.வி.குப்பம் 6 கிமீ 


மூலவர்: சக்திவேல் முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை: 

வேலூர் மாவட்டம் முழுவதும் மலைகளும், குன்றுகளும் ஏராளமாக உள்ளன. எனவே முருகப்பெருமான் எண்ணற்ற குன்றுகளில் குடியமர்ந்துள்ளது வேலூர் மாவட்டத்தின் சிறப்பாகும். வேலூரிலிருந்து 26 கிமீ தொலைவில் கே.வி.குப்பம் தாலூகா மேல்மாயில் பகுதியில் அமைந்துள்ள மயிலாடும் மலை சக்திவேல் முருகன் திருக்கோவில் மிக சிறப்பான கோவில். 


மேல்மாயில் மயிலாடும் மலை 93/4 அடி உயர சக்திவேல் முருகன் சிலைதான் தமிழ்நாட்டிலேயே உயரமான சிலை என்பது சிறப்பு. இவரது ஆற்றல் அளவிட முடியாத எண்ணற்ற பலன்களை உண்டாக்கும். 


கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் சிறப்பாக நடைபெறும். தினமும் வேலனக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் நடைபெறும். 7-ம் திருமண விழா மிக சிறப்பாக நடை பெற்று அன்னதானம் நடைபெறும். தைப்பூசத் திருநாளில், பக்தர்கள் கூடம் கூடமாய் பால்குடம், காவடி ஏந்தி வருகின்றனர். ஆடிக்கிருத்திகையும் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. முருகனுக்குரிய விசேஷ நாட்கள் அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படும். செவ்வாய், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை தினங்களில்  சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இந்த கோவிலில் பலர் திருமணம் செய்து கொள்கிறார்கள்.  


தல வரலாறு:

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மிளகாய் சித்தர் நாகராஜர் சுவாமிகள் என்ற மகானுக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருளி, தனக்கு ஒரு கோவில் எழுப்புமாறு கூறினார். 1973-ல் மிளகாய் சித்தர் மற்றும் அவருடைய துணைவியார் திலகவதி அம்மையார் இருவரும் சேர்ந்து ஊர் மக்களின் பொருளுதவியுடன் க்பவில் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினர். ஒரே கல்லில் ஆன மிக உயரமான முருகன் சிலை செய்ய ஏற்பாடு செய்தனர். மிளகாய் சித்தர் இறைவனடி சேர்ந்த பின் கோவில் திருப்பணி நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த மகானின் ஜீவசமாதி மலையின் கீழ் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அருளால் வேலூர் அருகில் உள்ள பாலமதி குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலைக் கட்டிய பாலமதி சித்தர் என்ற ராமகிருஷ்ண சாது இங்கு வந்து இந்தக் கோவில் திருப்பணியை மீண்டும் தொடர்ந்தார். பின்பு இந்த சுவாமிகளும் சிவ பதவி அடைந்ததால், மிளகாய் சித்தர் உறவினர் மற்றும் பக்தர்களால் கோவில் திருப்பணி ஓரளவு முழமையடைந்து 5 ஆண்டுகளுக்கு முன்னர் இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களின் காணிக்கையால் கோவில் திருப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது.  


தல அமைப்பு:

கோவிலினுள் முதலில் விநாயகர் வீற்றிருந்து அருள்கிறார். திருக்கோவில் கருவறையில், மூலவராக சக்திவேல் முருகன் சுமார் 93/4 அடி உயரத்தில் அழகிய ரூபத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தமிழகத்திலேயே இந்த கருவறை முருகப்பெருமான்தான் மிக உயரமானவர் என்பது பெரும் சிறப்பு. ராஜ அலங்காரத்தில் இந்த முருகனை பார்த்தாலே, பக்தர்கள் பரவசமடைவர். வள்ளி, தெய்வானை உடனிருப்பது கூடுதல் சிறப்பு. மிளகாய் சித்தரின் சிலை மற்றும் சிவலிங்கத்தை தரிசனம் செய்வது கூடுதல் பலன்களை தரும்.  


திருவிழா

தைப்பூசம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை, பொங்கல், ஆங்கில/தமிழ் புத்தாண்டு,  பிரதி சஷ்டி, கிருத்திகை, செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி


பிரார்த்தனை:

மன நிம்மதி வேண்டி, நினைத்தது நடைபெற, திருமணம் நடை பெற, ஐஸ்வர்யங்கள் பெருக, ஞானம் மேம்பட 


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள், அன்னதானம்


மேல்மாயில் மயிலாடும் மலை சக்திவேல் முருகனை மனக்கண்ணால் தரிசித்து வேண்டிக்கொண்டால் சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்குவார்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - கல்வி, ஞானம் மேம்பட அருளுகின்ற மேல்மாயில் மயிலாடும் மலை திருநீற்று அலங்கார சக்திவேல் முருகன்



படம் 2 - சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்கும் மேல்மாயில் மயிலாடும் மலை ராஜ அலங்காரத்தில் சந்தன காப்பு சக்திவேல் முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்