கோவில் 314 - மன்னார்குடி சக்திவேல் முருகன் கோவில்

 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-314

சித்ரா பவுர்ணமி திருவிழாவின் 12-ம் நாளான இன்று விடையாற்றி பெருவிழா நடைபெறும் மன்னார்குடி சக்திவேல் முருகன் கோவில் 

18.4.22 திங்கள்

அருள்மிகு சக்திவேல் முருகன் திருக்கோவில்

சக்திவேற் கோட்டம்

மன்னார்குடி-614001 

திருவாரூர் மாவட்டம்

இருப்பிடம்: ராஜகோபால சுவாமி திருக்கோவில்/பேருந்து நிலையம் 1.5 கிமீ

தொலைபேசி: 04367-227950  


மூலவர்: சக்திவேல் முருகன்

தீர்த்தம்: சஷ்டி தீர்த்தம்


தல மகிமை: 

சோழவள நாட்டின் காவிரி வலம் சூழும் செண்பாகரன்ய ஷேத்திரம் எனப் போற்றி புகழப்படும் ராஜமன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவிலிருந்து சிறிது தொலைவில் ஸ்ரீ துரைராஜ சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட கலியுகத் தெய்வமான கந்தப்பெருமானின் சக்திவேல் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.


கோவிலுக்கு எதிரில் இந்தியாவில் உள்ள 108 புண்ணிய நதிகள் மற்றும் தீர்த்தங்களில் இருந்து புனித நீர் இங்கு கொண்டு வரப்பட்டு நந்தவனத்துடன் கூடிய சிறப்பு தீர்த்த குளம் உருவாக்கப்பட்டுள்ளது எங்குமே காணமுடியாத சிறப்பாகும். இக்குளம் சஷ்டி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த புனித தீர்த்ததிலிருந்து எடுக்கப்படும் நீர்தான் முருகப்பெருமானின் அபிஷேகத்திற்கு உபயோகிக்கபடுகிறது. வீட்டு கிரகப்பிரவேசம் மற்றும் புண்ணிய காரியங்களுக்கு இத்தீர்த்தத்தை பயன்படுத்த அனுமதிப்பது கூடுதல் சிறப்பு. 


இக்கோவிலில் முக்கிய பெருவிழாவாக ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமி விழா 12 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு (50-வது ஆண்டு) சித்ரா பவுர்ணமி  திருவிழா 2022, ஏப்ரல் 7.-ல் கொடியேற்றத்துடன் தொடங்கி, நிறைவு விழா இன்று [18.4.22 திங்கள்–12-ம் நாள்] விடையாற்றி பெருவிழாவாக நடைபெறுகிறது. விழாவையொட்டி 14.4.2020-ல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சித்ரா பவுர்ணமியான நேற்று முன்தினம் [16.4.22] அரித்திராநதி தெப்பக்குளம் கரையிலிருந்து பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் சக்திவேல் முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் சஷ்டி, கார்த்திகை திருநாட்களில் சக்திவேல் முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஆடிக்கார்த்திகை மற்றும் தைக்கிருத்திகை நாட்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெறும். தினமும் அன்னதானம் உண்டு என்பது கூடுதல் சிறப்பு.  


மகான் துரைராஜ சுவாமிகளின் அருட்பீடம் [அதிஷ்டானம்] சக்திவேல் முருகன் கோவிலுக்கு அருகிலேயே தனி மண்டபத்தில் அமைந்துள்ளது. முருகப்பெருமானை மனம் மகிழ தரிசித்தவுடன், பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டு, தியானம் செய்வர். பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக ஐதீகம். சுவாமிகளின் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 6-ல் சிறப்பாக நடைபெறுகிறது. மகானின் 43-வது குருபூஜை நவம்பர் 2021-ல் நடைபெற்றது.

    

தல வரலாறு:

60 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார்குடி சித்தர் மகான் துரைராஜ சுவாமிகளின் சீரியப்பணியினாலும், முருகப்பெருமானின் வழிகாட்டுதாலும், சக்திவேல் முருகன் கோவில் மன்னார்குடி-தஞ்சாவூர் சாலையில் எழுப்பப்பட்டது. தற்போது சுவாமிகளின் வாரிசு திரு என்.டி. ராஜசேகரன் இக்கோவிலின் தர்மகர்த்தாவாக கோவிலின் முன்னேற்றத்திற்கு சீரிய பணியாற்றி வருகின்றார்.


தல அமைப்பு:

கோவிலுக்கு எதிரில் சக்தி வாய்ந்த விநாயகப்பெருமான் இரட்டை மரங்களடியில் வீற்றிருந்து அருள்கின்றார். அழகிய சிறிய ராஜகோபுரம் வழியாக் நுழைந்த உடன் கருவறையில் அழகன் முருகன், சக்திவேல் முருகன் என்ற திருப்பெயருடன் கையில் வேல் மற்றும் சேவற்கொடி தாங்கிய படி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருணயுள்ள கந்தன் ஒவ்வொரு அலங்கார வடிவிலும் கொள்ளை அழகுடன் காட்சி தருவது கண்கொள்ளா காட்சி.


கருவறையை சுற்றி துரைராஜ சுவாமிகளின் திருவுருவம், ஆறுபடை வீட்டு முருகப்பெருமான் சிற்பங்கள், அன்னை மீனாட்சி, காமாட்சி அம்மன் முதலான தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்கின்றனர். வடக்கு கோஷ்டத்தில் துர்க்கை அம்மன் காட்சி தருவது சிறப்பு. அம்மனுக்கு ராகு கால பூஜை விசேஷம். கோவிலுக்கு வெளியே பெரிய திறந்த மண்டபம் உள்ளது. அரங்கத்தில் நாட்டிய அரங்கேற்றம், இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.   


திருவிழா

சித்ரா பவுர்ணமி (12 நாள்), தைக்கிருத்திகை, ஆடிக்கிருத்திகை தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், வைகாசி விசாகம், பிரதி கார்த்திகை, சஷ்டி 


பிரார்த்தனை:

நினைத்த காரியம் நடைபெற, திருமணத்தடை அகல, குழந்தைப்பேறு வேண்டி, தீராத நோய்கள் தீர


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6 முதல் இரவு 9 வரை


மன்னார்குடி சக்திவேல் முருகனை மனமுருக வேண்டினால் தீராத நோய்களையும் தீர்த்தருள்வார்!                                                                                                                                                                          

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - முடியாததையும் சாத்தியமாக்கும் மன்னார்குடி சக்திவேல் முருகன் திருநீற்று அலங்காரத்தில்



படம் 2 - மனக்குழப்பங்களை தெளிவாக்கும் மன்னார்குடி சக்திவேல் முருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்