கோவில் 313 - மொரீசியஸ் கிளெமெண்சியா (Clemencia) பால தண்டாயுதபாணி சுவாமி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-313
ஞானத்தை அருளும் மொரீசியஸ் கிளெமெண்சியா (Clemencia) பால தண்டாயுதபாணி சுவாமி கோவில்
17.4.22 ஞாயிறு
அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
தமிழ் கோவில் சாலை (Tamiz temil Temple)
கிளெமெண்சியா (Clemencia)
மொரீசியஸ் (Mauritius)
மூலவர்: பால தண்டாயுதபாணி சுவாமி
தல மகிமை:
மொரீசியஸ் நாட்டின் கிளெமெண்சியா பகுதியில் வாழை தோப்புகள் மற்றும் பைன் ஆப்பிள் மரங்கள் சூழ்ந்த மலை உச்சியில் 150 ஆண்டுகள் பழைமையான பால தண்டாயுத சுவாமி என்ற பிரசித்தி பெற்ற கோவில் அமைந்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் தமிழர்களால் கட்டப்பட்ட மூன்றாவது திருக்கோவில் என்ற பெருமை பெற்றது.
இங்கு குடியேறிய தமிழர்கள் பழனி தண்டாயுதபாணியின் மீது கொண்ட அளவில்லா பக்தி காரணமாக மலையின் மீது நிர்மாணிக்கப்பட்ட இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகனுக்கு பால தண்டாயுதபாணி சுவாமி என்ற திருநாமம் இட்டனர். இக்கோவில் உறுதியான கற்களால் கட்டப்பட்டது. கோவிலில் அமைக்கப்பட்ட் ஆர்ச்சுகள் இன்றும் பலமாக இருப்பது சிறப்பு.
இக்கோவிலில் நுழையும் முன் முருகனிடம் அனுமதி கேட்பது போல, பூசாரி மற்றும் பலர் 20 முறை மணி அடித்து பின்பே, கோவிலுக்குள் நழைவது அதிசயம். மாட விளக்குகள் சிறப்பாக அமைக்கப்பட்ட்டுளன.
மொரீசியஸ் நாட்டிலேயே, இக்கோவிலில்தான் முதன் முதலாக காவடி திருவிழா கொண்டாடப்பட்டது என்பது சிறப்பு. சித்ரா பவுர்ணமி காலத்தில் காவடி விழா மிகச் சிறப்பாக பல்லாண்டு காலமாக நடைபெறுகிறது. சித்திரை வருட பிறப்பு காவடி விழாவில் பக்தர்கள் மச்சக் காவடியை சுமந்து வருவது மிக சிறப்பான நிகழ்வு. அருகில் உள்ள நீர் நிலைகளில் மீன்கள் பிடிக்கபட்டு இரண்டு கூடைகளில் வைக்கப்பட்டு, காவடியின் இருபக்கமும் சுமந்து வருவதை மச்சக் காவடி என்பர்.
தல வரலாறு:
தோட்டத் தொழிலாளர்களாக குடியேறிய தமிழர்கள், தமிழகம் போலவே தங்களது தெய்வமான முருகப்பெருமானுக்கு 1856-ல் இம்மலையின் மீது கோவில் எழுப்பினார்கள் என்று இக்கோவிலில் பூசாரியாக இருக்கும் சொக்கலிங்கம் கூறுகின்றார். மேலும், இவரது முன்னோர்கள் இத்திருக்கோவிலை கட்டியதாக கூறுகிறார். வழி வழியாக அவரது முன்னோர்கள் இக்கோவிலில் பூஜை செய்து பராமரித்து வருகிறார்கள். திராவிட கலாசரப்படியும், தமிழ் ஆகம விதிகளின் படியும் கற்களால் இக்கோவில் எழுப்பபட்டது. கோபுர சிற்பங்களில் சிவப்பெருமான், பார்வதி தேவி மற்றும் இதர தெய்வங்கள் ஆகியோர் வண்ணகோலத்தில் படிக்கப்பட்டுள்ளனர்.
தல அமைப்பு
படிகளில் பாடல்கள் பாடியப் படியே ஏறினால் கோவில் ராஜகோபுரத்தை அடையலாம். கோவில் ராஜகோபுரம், கர்ப்ப கிரகம், அதன் மீது விமானம், மண்டபம் ஆகிய முறைப்படி உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது. விதிகளின் படி கொடிக்கம்பம், பலி பீடம் முதலில் உள்ளன.
கோவில் கருவறையில் அழகிய ஞான வடிவான சிறிய மூர்த்தியாக பால தண்டாயுதபாணி சுவாமி கையில் வேல் மற்றும் தண்டம் ஏந்தி நின்ற கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரில் மயில் வீற்றிருப்பது அழகு. விநாயகர் முதலான தெய்வங்களும் அருளுகின்றனர்.
திருவிழா
சித்ரா பவுர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கார்த்திகை தீபம்,
பிரார்த்தனை:
ஞானம் பெருக, நினைத்தது நிறைவேற
நேர்த்திக்கடன்:
மச்சக் காவடி, பிற காவடிகள், அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள், அன்னதானம்
நினைத்ததை நிறைவேற்றும் கிளெமெண்சியா பால தண்டாயுதபாணி சுவாமியை போற்றி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - ஞானம் பெருக அருளும் மொரீசியஸ் கிளெமெண்சியா (Clemencia) பால தண்டாயுதபாணி சுவாமி
Comments
Post a Comment